/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சம்பா சாகுபடி விவசாயிகள் கலக்கம்! வறண்டு வரும் பெண்ணையாறு
/
சம்பா சாகுபடி விவசாயிகள் கலக்கம்! வறண்டு வரும் பெண்ணையாறு
சம்பா சாகுபடி விவசாயிகள் கலக்கம்! வறண்டு வரும் பெண்ணையாறு
சம்பா சாகுபடி விவசாயிகள் கலக்கம்! வறண்டு வரும் பெண்ணையாறு
ADDED : ஜூலை 22, 2024 01:14 AM

திருக்கோவிலுார்: சாத்தனுார் அணையில் குறைந்த அளவு தண்ணீருடன் தென்பெண்ணை வறண்டு கிடப்பதால் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட சம்பா சாகுபடி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், நந்தி துர்கா மலையில் உருவெடுக்கும் தென்பெண்ணையாறு, தமிழக எல்லையில் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி, சாத்தனுார், அணைகளைத் தாண்டி பெண்ணை ஆற்றில் பாய்ந்தோடி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்ட விவசாயத்திற்கு பெரும் பயனை கொடுத்து வருகிறது.
குறிப்பாக தென்மேற்கு பருவமழை காலத்தில் இந்த அணைகள் நிரம்பி விடும். ஆகஸ்ட் மாதம் துவக்கத்தில் சாத்தனுார் அணை நிரம்பி, தென்பெண்ணையில் தண்ணீர் திறப்பது வழக்கம்.
இதன் மூலம் திருக்கோவிலுார் அணைக்கட்டில் இருந்து பிரியும் பம்பை வாய்க்கால், மலட்டாறு, ராகவன் வாய்க்கால், மருதுார் வாய்க்கால், சித்தலிங்கமடம் வாய்க்கால் என ஐந்து வழித்தடங்களில் தண்ணீர் திருப்ப முடியும். 98 ஏரிகளுக்கு நேரடியாக தண்ணீர் சென்று 10 ஆயிரம் எக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதேபோல் 10 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் நேரடி பாசனத்தின் மூலம் பயன் பெறும். மேலும் நிலத்தடி நீர்மட்டம் மேம்பட்டு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் கரும்பு, வேர்க்கடலை, நெல் என விளைபொருட்கள் ஆண்டு முழுவதும் பயிரிடுவர்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பல இடங்களில் போதிய அளவு பெய்தாலும், பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை இல்லை. இதன் காரணமாக சாத்தனுார் அணைக்கான நீர் வரத்து முற்றிலும் இல்லாத காரணத்தால், அணையில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது.
இதனால் பெண்ணை ஆறு நாளுக்கு நாள் வறண்டு வருகிறது. வழக்கமாக ஆகஸ்ட் மாத துவக்கத்தில் தென்பெண்ணையில் தண்ணீர் வருவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்கின்றனர் விபரம் அறிந்த விவசாயிகள்.
இதனால் ஆடிப் பட்டம், அதாவது சம்பா சாகுபடிக்கு தயாராவதற்கு விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். வேளாண் விரிவாக்கம் மையங்களில் நெல் விதை விற்பனையும் மந்தமாகவே உள்ளது.
எனவே இந்த ஆண்டு குறிப்பிட்ட நேரத்தில் சம்பா சாகுபடி துவங்க முடியுமா என்ற அச்சத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட தென்பெண்ணையாற்று பாசன விவசாயிகள் காத்திருக்கின்றனர்.