/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இந்த ஆண்டு சம்பா நெல் சாகுபடி... கேள்விக்குறி; கச்சிராயபாளையம் விவசாயிகள் கவலை
/
இந்த ஆண்டு சம்பா நெல் சாகுபடி... கேள்விக்குறி; கச்சிராயபாளையம் விவசாயிகள் கவலை
இந்த ஆண்டு சம்பா நெல் சாகுபடி... கேள்விக்குறி; கச்சிராயபாளையம் விவசாயிகள் கவலை
இந்த ஆண்டு சம்பா நெல் சாகுபடி... கேள்விக்குறி; கச்சிராயபாளையம் விவசாயிகள் கவலை
ADDED : செப் 28, 2024 07:25 AM

கச்சிராயபாளையம்: கோமுகி அணையின் நீர் மட்டம் உயராததால் இந்த ஆண்டு சம்பா சாகுபடி குறித்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கச்சிராயபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயமும் அதனைச் சார்ந்த தொழில்களுமே இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. இப்பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பெரும்பாலானோர் விவசாய கூலித் தொழில்களையே நம்பியுள்ளனர்.
இங்கு நெல், கரும்பு, மரவள்ளி, மஞ்சள், மக்காச்சோளம், வாழை போன்ற பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதி விவசாயிகளின் முக்கிய நீராதரமாக கல்வராயன்மலையின் அடிவராத்தில் உள்ள கோமுகி அணை உள்ளது.
கோமுகி அணையின் பழைய பாசனமான கோமுகி ஆற்றில், வடக்கனந்தல் முதல் வேளாக்குறிச்சி வரை 12 அணைக் கட்டுகள் உள்ளன. இந்த அணைக் கட்டுகள் மூலம் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 43 ஏரிகள் நீராதாரம் பெற்று 6000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மேலும், கோமுகி அணையின் புதிய பாசன திட்டத்தில், அணையிலிருந்து 8,917 மீட்டர் துாரம் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய்கள் மூலம் கச்சிராயபாளையம், வடக்கனந்தல், மாத்துார், மண்மலை, கரடிசித்துார், தாவடிப்பட்டு, செல்லம்பட்டு, மாதவச்சேரி, சிவகங்கை உட்பட பல்வேறு கிராமங்களில் உள்ள 6,000 ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகின்றன.
கச்சிராயபாளையம் பகுதியில் கிணற்று பாசன விவசாயிகள் சம்பா, ஆனிகார், மாசிகார் என 3 போகங்களில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். கிணறு இல்லாத விவசாயிகள் பலர் கோமுகி அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கும் நீரை மட்டுமே நம்பியுள்ளனர்.
இந்த விவசாயிகள் ஆண்டிற்கு ஒரு போகம், சம்பா சாகுபடியை மட்டுமே செய்து வருகின்றனர். ஆண்டு தோறும் அக்டோபர் முதல் தேதியிலிருந்து பிப்ரவரி இறுதி வரை 5 மாதங்களுக்கு சம்பா சாகுபடிக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
தண்ணீர் திறப்பு தேதிக்கு ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அணையின் முழு கொள்ளவான 46 அடியில் தற்போது அணையின் நீர் மட்டம் 25 அடிக்கும் குறைவாகவே உள்ளது.
கோமுகி அணையில் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக 3 மாதங்களுக்கும் மேலாக ெஷட்டர் மாற்றும் பணி நடந்து வந்தது. இதனால் கடந்த மாதம் அதிகளவில் மழை பெய்தும் அதனை சேமித்து வைக்க முடியாத அவலம் ஏற்பட்டதால் அணைக்கு வந்த தண்ணீர் முழுதும் கோமுகி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனால் அணையில் 25 அடிக்கும் குறைவாகவே தற்போது நீர் நிரம்பியுள்ளது.
சம்பா சாகுபடி பருவம் துவங்கிய நிலையில் கோமுகி அணை நிரம்பாததால் விவசாயிகள் நாற்றாங்கால் அமைக்கும் பணிகளையும் துவங்காமல் உள்ளனர். இந்த ஆண்டு சம்பா பருவம் கேள்விக்குறியாக மாறியுள்ள நிலையில் கச்சிராயபாளையம் பகுதி விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
மேலும் அதிகாரிகளின் அலட்சியத்தால் எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையை எதிர் நோக்கி வானத்தை பார்த்து காத்திருக்கும் நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.