ADDED : ஆக 24, 2026 05:32 PM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் வங்கிகள், ஏ.டி.எம்., மையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் செக்யூரிட்டிகளுக்கு காவல்துறை சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டது.
திருக்கோவிலுார், மணலுார்பேட்டை, ரிஷிவந்தியம், பகண்டைகூட்ரோடு, திருப்பாலபந்தல் காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் வங்கிகள், ஏ.டி.எம்., மையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் செக்யூரிட்டிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் திருக்கோவிலுாரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர் அன்பழகன் வரவேற்றார். டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமை தாங்கி பேசுகையில், ‘செக்யூரிட்டிகள் பணியின் போது விழிப்புடன் இருக்க வேண்டும். உங்களுக்கென தனியாக வாட்ஸ் ஆப் குரூப்பை உருவாக்கி அதன் மூலம் கருத்துகளை பரிமாறிக் கொள்ள வேண்டும்.
சந்தேகப்படும் நபர்கள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஏ.டி.எம்., மையங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்’ என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற செக்யூரிட்டிகள் தங்கள் சந்தேகங்களை பகிர்ந்து கொண்டனர். இதில் போலீசார், பாதுகாவலர்கள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.
