/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கட்சிகளுக்கு சவாலாக இருக்கும் பூத் கமிட்டி நிர்வாகிகள் தேர்வு
/
கட்சிகளுக்கு சவாலாக இருக்கும் பூத் கமிட்டி நிர்வாகிகள் தேர்வு
கட்சிகளுக்கு சவாலாக இருக்கும் பூத் கமிட்டி நிர்வாகிகள் தேர்வு
கட்சிகளுக்கு சவாலாக இருக்கும் பூத் கமிட்டி நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஜூன் 24, 2025 08:02 AM
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அ.தி.மு.க.,வினரும், தி.மு.க.,வினரும் பூத் கமிட்டி அமைப்பதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
அரசியல் கட்சிகளுக்கு தேர்தலை எதிர்கொள்ள மிகப்பெரும் பலமாக இருப்பது பூத் கமிட்டி. இதனை உணர்ந்த அ.தி.மு.க., தலைவர் பழனிசாமி பூத் கமிட்டி அமைக்கும் நடவடிக்கையில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் இதற்கான பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஒவ்வொரு பூத்திற்கும் 4 பெண்கள், 5 ஆண்கள் அடங்கிய பூத் கமிட்டி நிர்வாகிகள் பட்டியலை போட்டோவுடன் இணைத்து கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில் உறுப்பினர்களை சேர்ப்பதில் அ.தி.மு.க., நிர்வாகிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். விரைவில் தொகுதி வாரியாக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப் பட்டிருப்பது நிர்வாகிகளை கலக்கமடையச் செய்துள்ளது.
அதேபோல் தி.மு.க.,விலும் 11 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைப்பதில் தடுமாற்றம் ஏற்பட்டிருப்பதாக அதன் நிர்வாகிகள் வெளிப்படையாகவே ஒப்புக் கொள்கின்றனர்.
தி.மு.க., வினரும் ஆங்காங்கே பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தி கூடவே உறுப்பினர் சேர்க்கையையும் வலியுறுத்தி வருகின்றனர்.
பூத் கமிட்டியில் சேர்வதற்கு தயக்கம் காட்டுவதற்கு காரணம் ஒரு கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினராக இருந்து விட்டால் மற்ற கட்சிக்காரர்கள் தங்கள் குடும்பத்தையே கவனத்தில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
இதன் காரணமாக தேர்தலில்போது அரசியல் கட்சிகளின் கவனிப்பு கிடைக்காமல் போய் விடும் என தயக்கம் காட்டுவதாக பூத் கமிட்டி உறுப்பினர் சேர்க்கையில் திண்டாடும் கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
பூத் கமிட்டியை பலப்படுத்தினால்தான் தேர்தல் வெற்றி எளிதில் அமையும் என்பது அரசியல் கட்சியினரின் கணக்காக இருக்கும் நிலையில், உறுப்பினர்களின் எண்ணம் வேறாக உள்ளது.