ரூ. 30.90 கோடியில் 4 வழி சாலை விரிவாக்கம் பணி... தீவிரம்
ரூ. 30.90 கோடியில் 4 வழி சாலை விரிவாக்கம் பணி... தீவிரம்
UPDATED : மே 12, 2026 08:47 PM
ADDED : மே 12, 2026 08:31 PM

சின்னசேலம்: சின்னசேலம் நகர் பகுதியில் மக்களின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வாக, ரூ 30.90 கோடி மதிப்பில் இரு வழி சாலையை நான்கு வழி சாலை விரிவாக்கம் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலை சின்னசேலம் வழியாக செல்கிறது. இதனால் சின்னசேலம் முக்கிய பகுதியாக திகழ்கிறது. சேலம், நாமக்கல், ஈரோடு, கோயம்பத்துார் மற்றும் கேரளா மாநிலம் செல்வதற்கு சின்னசேலத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் சின்னசேலம் நகரத்திலிருந்து பல்வேறு கிராமங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் நாள் தோறும் ஆயிரம் கணக்கான வாகனங்கள் சின்னசேலத்தை கடந்து செல்கிறது.
சின்னசேலம் நகர் பகுதியில் உள்ள சாலை இருவழி சாலையாக இருந்தது. நகர் பகுதியில் கடைகள், தனி நபர்களின் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால் சின்னசேலம் நகர் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
நகர் பகுதி சாலைகள் பல ஆண்டுகளாக மேம்படுத்தபடாமல் இருந்தது. இதனால் அவ்வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லுாரி வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்து வந்தனர். குறிப்பாக காலை, மாலை நேரங்கள், முகூர்த்த தினங்கள், பண்டிகை நாட்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் போராட்டம், ஆர்பாட்டம் போன்ற நேரங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு நகரமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுகிறது.
குறுகலான சாலையால் அடிக்கடி நிகழும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தது. நகர்புற இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்த வேண்டும் என பொது மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். சின்னசேலம் நகர் பகுதி சாலை தேசிய நெடுஞ்சாலையின் கீழ் இருந்ததால் மாநில அரசால் இந்த சாலையை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள முடியாத சூழல் இருந்தது.
கடந்த ஆண்டு சின்னசேலம் சாலை மாநில நெடுஞ்சாலையாக மாற்றம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பொது மக்களின் கோரிக்கை ஏற்று சின்னசேலம் மின்வாரிய அலுவலகம் முதல் அம்மையகரம் வரை 4.7 கி.மீ., துார இரு வழிச்சாலையை சென்டர் மீடியனுடன் கூடிய நான்கு வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதற்காக முதல்வரின் சாலை மேம்பட்டு திட்டத்தின் கீழ் ரூ. 30 கோடியே 90 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டது.
வருவாய் துறை மூலம் அளவீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. சாலையோரத்தில் இருந்த மின் கம்பங்கள், மின்மாற்றிகள் இடமாற்றம் செய்யப்பட்டு, மரங்களும் அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, கடந்த பிப்., மாதம் சாலை விரிவாக்கம் பணி துவங்கியது. அம்சாகுளம் பகுதியில் ஒரு புறம் ஏரியும் மறுபுறம் குடியிறுப்பு உள்ளது. இதனால் நான்கு வழி சாலை அமைக்க இடம் பற்றாக்குறை ஏற்பட்டது.
பொதுபணித்துறை ஒப்புதலுடன் சாலை ஓரத்தில் ஏரியின் ஒரு பகுதியில் தடுப்பு சுவர் அமைத்து சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சாலையில் 12 கல்வர்ட் பாலம் அகலப்படுத்தி, ஏரி கோடி வாய்க்கால் குறுக்கே புதிய மேம்பாலம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
விபத்துக்களை தடுக்கும் தடுக்கும் வைகையில் கூகையூர், மூங்கில்பாடி, நைனார்பாளையம், அண்ணாநகர், அம்சாகுளம், ரயில்வே பிரிவு சாலை ஆகிய இடங்களில் சாலை சந்திப்பை அகலப்படுத்தும் பணிகளும் ஜரூராக நடந்து வருகிறது. சின்னசேலம் பகுதி மக்களின் நீண்ட கோரிக்கை நிறைவேறி உள்ளதால் பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
