/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலையில் சில்வர்வாக் மரக்கன்றுகளுக்கு... தட்டுப்பாடு: தோட்டக்கலைத்துறை உற்பத்தி செய்து வழங்க கோரிக்கை
/
கல்வராயன்மலையில் சில்வர்வாக் மரக்கன்றுகளுக்கு... தட்டுப்பாடு: தோட்டக்கலைத்துறை உற்பத்தி செய்து வழங்க கோரிக்கை
கல்வராயன்மலையில் சில்வர்வாக் மரக்கன்றுகளுக்கு... தட்டுப்பாடு: தோட்டக்கலைத்துறை உற்பத்தி செய்து வழங்க கோரிக்கை
கல்வராயன்மலையில் சில்வர்வாக் மரக்கன்றுகளுக்கு... தட்டுப்பாடு: தோட்டக்கலைத்துறை உற்பத்தி செய்து வழங்க கோரிக்கை
ADDED : ஜூலை 07, 2025 02:23 AM

கச்சிராயபாளையம்: கல்வராயன்மலை பகுதியில் சில்வர்வாக் மரக்கன்றுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அரசு தோட்டக்கலை சார்பில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்வராயன்மலை பெரிய கல்வராயன், சின்ன கல்வராயன் மலை என இரண்டு பிரிவுகளை கொண்டுள்ளது. பெரிய கல்வராயன் மலை கடல் மட்டத்திலிருந்து 4,500 அடி உயரமும், சின்ன கல்வராயன்மலை 3000 அடி உயரமும் கொண்டது. இதன் மொத்த நிலபரப்பு 57 லட்சம் 11 ஆயிரத்து 124 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. கல்வராயன் மலையில் 145 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
கல்வராயன்மலை கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு எல்லையாக உள்ளது. இம்மலையில் மானாவாரி முறையில் சாமை, வரகு, தினை, மரவள்ளி, மக்காசோளம் போன்ற பயிர்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர். குறிப்பாக இங்கு பருவ மழை துவங்கும் காலங்களில் மரவள்ளி நடவு செய்து,10 மாதங்களுக்கு பிறகு அறுவடை செய்கின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அறுவடை நடப்பதால், போதிய வருமானம் இன்றி விவசாய கூலித்தொழிலாளர்கள், வெளி மாநிலங்களுக்கு கூலி வேலைக்கு செல்கின்றனர்.
இதுதவிர, தக்காளி, பீன்ஸ், முட்டை கோஸ் போன்ற காய்கறி பயிர்களும் சாகுபடி செய்கின்றனர். இப்பயிர்கள் சில நேரங்களில் மட்டும் லாபம் அளித்தாலும், பல முறை செலவு செய்த தொகை கூட கிடைக்காத நிலை உள்ளது.
இதனால் மாற்று பயிர் சாகுபடிக்கு விவசாயிகள் நகர துவங்கி விட்டனர். கல்வராயன் மலை பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, தோட்டக்கலை மற்றும் வேளான்துறை சார்பில் விவசாயிகளுக்கு காபி மற்றும் மிளகு சாகுபடி செய்தல், பட்டு பூச்சி வளர்த்தல், தேன் வளர்த்தல் போன்ற பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
சில விவசாயிகள் சோதனை அடிப்படையில் மிளகு மற்றும் காபி செடிகள் சாகுபடி செய்து தற்போது அறுவைடையும் செய்து வருகின்றனர். இதனை பார்த்து, கல்வராயன்மலை பகுதி மற்ற விவசாயிகளும் மிளகு மற்றும் காபி சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளனர்.
மிளகு மற்றும் காபி செடிகள் நடவு செய்வதற்கு முன்பு சில்வர்வாக் செடிகள் நடவு செய்து அந்த மரங்கள் நன்கு வளர்ச்சி அடைந்த பின்பே மிளகு மற்றும் காபி செடிகளை நடவு செய்ய வேண்டும். இதற்காக விவசாயிகள் அதிகளவில் சில்வர்வாக் செடிகளை தங்கள் நிலங்களில் நடவு செய்து வருவதால், சில்வர்வாக் மரக்கன்றுகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கல்வராயன் மலை பகுதி விவசாயிகள் ஏற்காடு மலைக்கு சென்று, அங்கிருந்து கூடுதல் விலை கொடுத்து சில்வர் வாக் மரக்கன்றுகளை வாங்கி வருகின்றனர்.
பல விவசாயிகள் தனியார் நர்சரிகளில் குவிந்து வருவதால் சில்வர்வாக் கன்றுகளின் விலையும், நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கூடுதல் விலை கொடுத்தாலும் சில்வர்வாக் கன்று கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் முன்பணம் செலுத்தி காத்திருக்கின்றனர்.
எனவே, தோட்டக்கலை துறை மற்றும் வனத்துறை சார்பில் சில்வர்வாக் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து தங்கு தடையின்றி விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

