கார் மோதி தி.மு.க., நிர்வாகி இறந்த சம்பவம் ஆறு பேர் மீது வழக்கு பதிவு
கார் மோதி தி.மு.க., நிர்வாகி இறந்த சம்பவம் ஆறு பேர் மீது வழக்கு பதிவு
UPDATED : அக் 29, 2026 10:42 PM
ADDED : அக் 29, 2026 10:37 PM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே காதல் திருமணம் தொடர்பான மோதலில், பெண்ணின் சகோதரர் காரை வேகமாக இயக்கி தி.மு.க., கிளைச் செயலாளர் உயிரிழந்த சம்பவத்தில் ஆறு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த ஜி.அரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிராஜ், 24; இவர் காடியார் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது பெண்ணை காதலித்தார். திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 24ம் தேதி அப்பெண்ணை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் அண்ணன் சத்தியமூர்த்தி, 30; தம்பி தவசி, 20; உறவினர்களான முரளி மகன் ஆதி, 21; நாராயணன் மகன் இளையதளபதி, 25; முரளி மகன் மனோஜ், 26; ராமதாஸ் மகன் விக்கி, 20; ஆகியோர் நேற்று முன்தினம் மதியம் 2:45 மணிக்கு மணிராஜ் வீட்டிற்கு சென்று தகராறு செய்து விட்டு புறப்பட்டனர்.
காரின் எதிரி எவன் வந்தாலும் ஏற்றி கொல்லுடா என்று உடன் வந்தவர்கள் கூற, காரை ஒட்டிய சத்தியமூர்த்தி அவ்வழியாக பைக்கில் சென்ற தி.மு.க., கிளைச் செயலாளர் ராஜேஷ் 33; மீது மோதி, 100 மீட்டர் துாரத்திற்கு இழுத்துச் சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இறந்த ராஜேஷின் தந்தை காந்தி, 56; கொடுத்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் கொலை மிரட்டல் விடுத்தல், கொலைக்கு நிகராகாத மரணம் விளைவித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ், ஆறு பேர் மீது வழக்குப்பதிந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சத்தியமூர்த்தி, இளையதளபதி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
