UPDATED : அக் 13, 2026 07:06 PM
ADDED : அக் 13, 2026 05:18 PM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கோட்ட மின் வாரியம் சார்பில், ‘சேவா சேது அபியான்’ திட்ட சோலார் விண்ணப்ப சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
கீழையூரில் நடந்த முகாமிற்கு, கள்ளக்குறிச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நாகராஜ்குமார் தலைமை தாங்கினார். செயற் பொறியாளர் முத்துக்குமாரசாமி முன்னிலை வகித்தார். திருக்கோவிலுார் செயற்பொறியாளர் முருகேசன் வரவேற்றார்.
நகர மன்ற தலைவர் முருகன் குத்து விளக்கேற்றி முகாமைத் துவக்கி வைத்தார். தொழிலதிபர்கள் முருகன், ஜெயராமன் சிறப்புரையாற்றினர்.
உதவி செயற் பொறியாளர்கள் சுரேஷ்குமார், காயத்ரி, சுதாகர் ஆகியோர் திட்டத்தின் நன்மைகள் குறித்தும், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியங்கள் குறித்தும் விளக்கினர்.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சோலார் மின் உற்பத்தி அமைப்பதற்கான விண்ணப்பங்களை வழங்கினர்.
வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்கு சோலார் பேனல் விற்பனை நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர்.
மேலும் வங்கிக் கடனுதவி பெறுவதற்கான வழி வகைகள் குறித்தும் பொதுத்துறை வங்கிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று பேசினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மின்வாரிய ஊழியர்கள் செய்திருந்தனர்.
