ADDED : ஏப் 13, 2025 06:47 AM
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே, போதை தந்தையை அடிக்க வீசிய கல்லால், அரசு பஸ் டிரைவர் காயம் அடைந்ததால், மகனை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை தாலுகா, எலவனாசூர்கோட்டையை அடுத்த மேலப்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில், 49; கூலித்தொழிலாளி. இவர் குடித்து விட்டு, வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு வழக்கம் போல குடித்து விட்டு, பிரதான சாலை அருகில் தகராறு செய்தார். இதனால் அவரது மகன், சதீஷ்,19; ஆவேசம் அடைந்து, தந்தையை அடிக்க கல்லை வீசினார்.
அந்த கல், திருச்சியில் இருந்து வேலுார் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது விழுந்து முன் பக்க கண்ணாடி உடைந்தது.
மேலும் பஸ்ஸை ஓட்டிச்சென்ற வேலுார் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வடக்காத்திப்பட்டியை சேர்ந்த டிரைவர் பாரதிராஜா, 47; காயம் அடைந்தார். உடனடியாக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அவரது புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து சதீஷை கைது செய்தனர்.