/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'மாஜி' விட்ட 'சவுண்டு': பழனிசாமி 'டென்ஷன்'
/
'மாஜி' விட்ட 'சவுண்டு': பழனிசாமி 'டென்ஷன்'
ADDED : மார் 12, 2024 06:21 AM
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கான நேர்காணலின்போது 'சவுண்டு' விட்ட முன்னாள் அமைச்சர் மோகனை, பொதுச் செயலாளர் கடிந்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட 56 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். விருப்ப மனு அளித்த அனைவரும் சென்னையில் நடந்த நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.
முதல் நபராக ரிஷிவந்தியம் ஒன்றிய செயலாளர் துரைராஜ் அழைக்கப்பட்ட நிலையில், அவர் வராததையடுத்து முன்னாள் எம்.பி., காமராஜ், திருக்கோவிலுார் ஒன்றிய செயலாளர் சந்தோஷ், சின்னசேலம் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் என ஒருவர் பின் ஒருவராக அழைத்து நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது.
நான்காம் நபராக, தகவல் தொழில்நுட்ப அணியின் விழுப்புரம் மண்டல துணைத் தலைவர் மாலதியை அழைத்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த முன்னாள் அமைச்சர் மோகன், 'கட்சியில் பதவியில் இல்லாதவர் மற்றும் கட்சி பணி செய்யாதவர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளார்' எனக் கூறியுள்ளார். உடன், மாவட்ட செயலாளர் குமரகுரு, 'அந்த பெண் கட்சி பதவியில் இருக்கிறார்' என தெரிவித்துள்ளார். சிறிது நேரம் இருவருக்குமிடையே அங்கேயே விவாதம் ஏற்பட்டுள்ளது.
நேர்காணலின்போது முன்னாள் அமைச்சர் மோகன், அனைவரின் மத்தியிலும் எதிர்ப்பு குரல் எழுப்பி பேசியது, பொதுச் செயலாளர் பழனிசாமியை கோபமடையச் செய்துள்ளது. 'பொது இடத்தில் (சபையில்) இப்படியா பேசுவது? எதுவாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் என்னிடம் கூறுங்கள்' என முன்னாள் அமைச்சர் மோகனை கடிந்து கொண்டார்.
இந்த களேபரத்தில் 4 பேருடன் நேர்காணலை முடித்து கொண்ட பழனிசாமி, கட்சியில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வெற்றி செய்ய வேண்டும் என்று கூறி அனைவரையும் அனுப்பி வைத்துள்ளார்.

