/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நிலுவை மனுக்களை பதிவேற்ற சிறப்பு மையம்; தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
/
நிலுவை மனுக்களை பதிவேற்ற சிறப்பு மையம்; தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
நிலுவை மனுக்களை பதிவேற்ற சிறப்பு மையம்; தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
நிலுவை மனுக்களை பதிவேற்ற சிறப்பு மையம்; தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
ADDED : பிப் 15, 2024 10:11 PM
கள்ளக்குறிச்சி : அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் கடந்த டிச., 2ம் தேதிக்கு முன் விண்ணப்பித்து, நிலுவையில் உள்ள மனுக்களை மீண்டும் பதிவேற்றம் செய்ய சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் பழனி செய்திக்குறிப்பு: அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தி, சமூக பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு உடலுழைப்பு தொழிலாளர்கள் சட்டத்தை தமிழக அரசு உருவாக்கியது. இதில் உள்ள 18 நலவாரியங்களில், 18 - 60 வயதுக்குட்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
இதன் மூலம் கல்வி, திருமணம், பிரசவம், கண் கண்ணாடி, வீட்டு வசதி திட்டம், ஓய்வூதியம், இயற்கை மற்றும் விபத்து மரணம் உள்ளிட்டவற்றிற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதி வாய்ந்தவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்த 2023ம் ஆண்டு டிச., 2ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்கப்பட்ட பலரது மனுக்கள் நிலுவையில் உள்ளது. இம்மனுக்களை மீண்டும் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், தொழிலாளர்களின் நலன் கருதி, கள்ளக்குறிச்சி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மனு நிலுவையில் உள்ள தொழிலாளர்கள், தங்களது விண்ணப்பம் மற்றும் அனைத்து அசல் சான்றுகளுடன் எண்.23/ஏ, தாய் இல்லம், அண்ணா நகர் மெயின்ரோடு, கள்ளக்குறிச்சி 606202 - என்ற முகவரியில் இயங்கும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்), சிறப்பு உதவி மையத்தில் நேரில் சமர்ப்பித்து மீண்டும் பதிவேற்றம் செய்யலாம்.
இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.