ADDED : செப் 08, 2026 05:20 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பூம்பூம் மாட்டுக்கார பழங்குடியின மக்கள் அரசு ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார் பகுதிகளில் வசிக்கும் ஆதியன் எனப்படும் பூம்பூம் மாட்டுக்கார பழங்குடியின மக்கள் ஜாதிச்சான்றிதழ் கேட்டு பல்வேறு முறை மனு அளித்துள்ளனர். ஆனால் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதையடுத்து, பூம்பூம் மாட்டுக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டனர்.
அப்போது ஜாதிச்சான்றிதழ் வழங்காததால் தங்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், எனவே, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குறிப்பிட்ட சிலரை மட்டும் கலெக்டரிடம் அழைத்து சென்றனர்.
அங்கு, பழங்குடியின மக்களின் குறைகளை கேட்டறிந்த கலெக்டர் பத்மஜா, இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து, கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
