/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு டவுன் பஸ்களில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்
/
அரசு டவுன் பஸ்களில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்
அரசு டவுன் பஸ்களில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்
அரசு டவுன் பஸ்களில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்
ADDED : ஜூலை 29, 2025 11:55 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கிராமப்புற வழித்தட அரசு டவுன் பஸ்களில் பள்ளி மாணவர்கள் தொங்கியபடி மேற்கொள்ளும் ஆபத்தான பயணத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சங்கராபுரம், உளுந்துார்பேட்டை, கச்சிராயபாளையம், திருக்கோவிலுார் பகுதிகளில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தனி தனியாக இயங்குகிறது. இங்கு நகர பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமின்றி சுற்று வட்டார கிராம மாணவர்களும் அதிகளவில் பஸ்சில் பயணித்து படிக்கின்றனர்.
கிராமப்புறங்களில் உயர்நிலைப் பள்ளியாக இருந்தவை தற்போது மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகைய மேல்நிலைப் பள்ளி உள்ள கிராமங்களுக்கு, குறிப்பிட்ட சில நேரம் மட்டுமே ஒரிரு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இவை மாணவர்களுக்கு போதுமானதாக இல்லை. அதுபோல் காலை மாலை நேரத்தில் நகர பகுதியை நோக்கி செல்லும் டவுன் பஸ்கள் எண்ணிக்கையும் குறைவு.
இதனால் கிராமப் புறங்களுக்கு செல்லக்கூடிய அரசு பஸ்களில் மாணவர்கள் பெரும்பாலும் பஸ்சில் தொங்கியபடி செல்கின்றனர். கள்ளக்குறிச்சி - பெரியசிறுவத்துார் வழியாக செல்லும் அரசு பஸ், கள்ளக்குறிச்சி - தண்டை, பெருவங்கூர் வழியாக செல்லக்கூடிய பஸ், நைனார்பாளையம் - தொழுதுார் செல்லும் பஸ் உட்பட மாவட்டத்தில் பெரும்பாலான வழித்தடங்களில் இதுபோன்ற சூழ்நிலை உள்ளது.
காலை மாலை நேரங்களில் மாணவர்கள் மட்டுமின்றி, மக்களின் கூட்டமும் அதிகமாக காணப்படும். இதனால் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி சாகச பயணம் மேற்கொள்கின்றனர்.
பஸ் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்யும் வீடியோக்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பஸ்சில் மாணவர்கள் மேற்கொள்ளும் ஆபத்தான பயணம் பயணிகள் மட்டும் இன்றி, அதனை காணும் பொதுமக்களையும் அச்சமடைய செய்கிறது.
இதனை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். விபத்து ஏற்பட்டாமல் மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதன்பின் கண்டுகொள்வது கிடையாது.
பஸ்களில் மாணவர்களின் ஆபத்தான சாகச பயணத்தை தடுக்க, தலைமை ஆசிரியர்களுடன் போக்குவரத்து துறை அலுவலர்கள் ஆலோசனை செய்து, பள்ளி இயங்கும் கிராமப்புறங்களுக்கு, காலை மாலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கவும், பஸ்சில் தொங்கி செல்லும் மாணவர்களை போலீசார் கண்காணித்து எச்சரிக்கை செய்தால் மட்டுமே தடுக்க முடியும்.