/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் தேவை! போக்குவரத்து நெரிசலை போக்க வலியுறுத்தல்
/
கள்ளக்குறிச்சியில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் தேவை! போக்குவரத்து நெரிசலை போக்க வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சியில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் தேவை! போக்குவரத்து நெரிசலை போக்க வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சியில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் தேவை! போக்குவரத்து நெரிசலை போக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 02, 2025 06:31 AM

கள்ளக்குறிச்சி பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக விளங்குகிறது.
பஸ் ஸ்டேண்ட் நான்கு முனை சந்திப்பையொட்டி அமைந்துள்ளதால், பஸ்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் இடங்கள் வரை அவ்வப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவில் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் நகரை கடந்து செல்லும்போது, நகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து பணிமனை மூலம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 200க்கும் மேற்பட்ட பஸ்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. சென்னை, சேலம், திருவண்ணாமலை, கடலுார், திருச்சி, கோவை, பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து பஸ்கள் செல்கிறது. அதேபோல், தனியார் பஸ்களும் அதிகளவில் இயக்கப்படுகிறது.
கிராமப்புற மற்றும் வெளியூர் செல்லும் பஸ்கள் என நாள்தோறும் 1,000க்கும் மேற்பட்ட பஸ்கள் கள்ளக்குறிச்சி பஸ் ஸ்டேண்ட்டை கடந்து செல்கிறது.சுற்று வட்டார கிராம மக்கள் உட்பட நாள்தோறும் 6,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கிருந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். குறுகிய பஸ் ஸ்டாண்ட்டாக இருக்கும் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டன.இருப்பினும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது குறையவில்லை.
கடந்த 2019ம் ஆண்டு முதல் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் இயங்கி வருகிறது. இதனால் பல்வேறு மாவட்ட அரசு அலுவலகங்கள் கள்ளக்குறிச்சியில் செயல்படும் நிலையில் பொதுமக்களின் வருகைகள் அதிகரித்து வருகிறது. கள்ளக்குறிச்சி நகரின் நான்கு முக்கிய சாலையிலும் வாகன போக்குவரத்து மிகுதியால், போக்குவரத்து பாதிப்பு தொடர்கதையாக இருக்கிறது. அவசர ஆம்புலன்ஸ்கள், மாவட்ட அரசு உயர் அதிகாரிகளின் வாகனங்களும் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதை காணமுடிகிறது.
மாவட்டத்தின் தலைநகரமான கள்ளக்குறிச்சியில், வாகன பெருக்கத்திற்கேற்ப பஸ் ஸ்டாண்ட் , சாலை வசதி இன்றி உள்ளது. தற்போதை பஸ் ஸ்டாண்டை டவுன் பஸ் ஸ்டாண்ட்டாக மாற்றம் செய்து, வெளியூர் செல்லும் பஸ்களுக்கு என்று நகரின் வெளிப்புறத்தில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமைத்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த முடியும்.
எனவே, மாவட்ட பொறுப்பு அமைச்சர் வேலு உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கலெக்டர் பிரசாந்த் ஆகியோர் புதிய புறநகர் பஸ் ஸ்டேண்ட் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.