/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புறநகர் பஸ் நிலைய பணி மும்முரம்! ரூ.16.21 கோடியில் அமைகிறது
/
புறநகர் பஸ் நிலைய பணி மும்முரம்! ரூ.16.21 கோடியில் அமைகிறது
புறநகர் பஸ் நிலைய பணி மும்முரம்! ரூ.16.21 கோடியில் அமைகிறது
புறநகர் பஸ் நிலைய பணி மும்முரம்! ரூ.16.21 கோடியில் அமைகிறது
ADDED : ஜூன் 15, 2025 10:41 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் 16.21 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள புறநகர் பஸ் நிலைய கட்டுமான பணிக்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி நகரின் மைய பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வங்கிகள், காவல் நிலையம், தாலுகா அலுவலகம், நீதிமன்றம், உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட் மற்றும் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக தினமும் கள்ளக்குறிச்சிக்கு வருகின்றனர்.
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை நாட்கள், சுபமுகூர்த்த தினங்களில் நகரம் போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பிக்கும். மெயின்ரோட்டை ஒட்டியவாறு உள்ள கடைகளுக்கு வருபவர்கள் வாகனங்களை சாலையில் தாறுமாறாக நிறுத்திச் செல்வதால் வாகனங்கள் எளிதில் செல்ல முடியாது.
குறிப்பாக, காலை மற்றும் மாலை வேளையில் பள்ளி, கல்லுாரி பஸ்கள் கள்ளக்குறிச்சி வழியாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாக நீடிக்கிறது.
மேலும், கரும்பு ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் செல்லும் போது, வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து ஊர்ந்தபடி செல்லும். போக்குவரத்து நெரிசலை சுட்டிக் காட்டி அரசு மற்றும் தனியார் சொகுசு பஸ்கள் கள்ளக்குறிச்சி நகருக்குள் வருவதில்லை.
கள்ளக்குறிச்சி கடந்த 2019ம் ஆண்டு மாவட்ட தலைநகரானதும் கலெக்டர் அலுவலகம் உட்பட பல்வேறு அரசு மாவட்ட அலுவலகங்கள் வந்தன. இதனால், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் புறநகர் பஸ் நிலையமும், 'ரிங் ரோடும்' அமைத்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியும். இதில் 'ரிங் ரோடு' பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
புறநகர் பஸ்நிலையம் அமைக்க, ஏமப்பேர் கிராம எல்லையில் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடரில் கள்ளக்குறிச்சி உட்பட 8 நகராட்சிகளில் 142.68 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்படும் என அமைச்சர் நேரு தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சியில் புறநகர் பஸ் நிலையம் அமைக்க 16.21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நகராட்சி சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, பஸ் நிலையம் அமைக்க புறவழிச்சாலையில், ஏமப்பேர் மேம்பாலத்தில் இருந்து சிறிது தொலைவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, மேம்பாலத்தை ஒட்டியவாறு இருபுறமும் சாலை அமைக்க அளவீடு செய்யப்பட்டு, மண் சமன்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல், புறநகர் பஸ் நிலையத்திற்கு வாகனங்கள் செல்வதற்கான வழிப்பாதை மற்றும் தரைப்பாலம் அமைக்கும் பணியும், பஸ் நிலையத்தில் மண் கொட்டி சமன்படுத்தும் பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. சட்டசபை தேர்தலுக்குள் புறநகர் பஸ் நிலையும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுவதால், பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.