பாசனத்திற்கு தண்ணீரின்றி விவசாயிகள் தவிப்பு!சொட்டுநீர் பாசன திட்டம் தீவிரப்படுத்தப்படுமா?
பாசனத்திற்கு தண்ணீரின்றி விவசாயிகள் தவிப்பு!சொட்டுநீர் பாசன திட்டம் தீவிரப்படுத்தப்படுமா?
UPDATED : ஜூலை 28, 2026 03:25 PM
ADDED : ஜூலை 28, 2026 03:21 PM
தியாகதுருகம்: குறைந்த தண்ணீரை திட்டமிட்டு பயன்படுத்தி அதிக மகசூல் பெறும் சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு அரசு வழங்கும் மானியத்தை சிறு, குறு விவசாயிகள் பெற்று பயனடைய வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. நெல், கரும்பு, மக்காச்சோளம், மரவள்ளி, பருத்தி, மஞ்சள், வேர்க்கடலை , கம்பு, கேழ்வரகு, உளுந்து ஆகிய வேளாண் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
இது மட்டுமின்றி காய்கறி மற்றும் மலர் சாகுபடி செய்து விவசாயிகள் வருவாய் ஈட்டி வருகின்றனர். நெல் சாகுபடி பொருத்தவரை பருவமழை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாத தருணத்தில் நடவு செய்து அறுவடை செய்யப்படுகிறது.
ஆனால் கரும்பு, மரவள்ளி, மஞ்சள் ஆகியவை ஆண்டு பயிர் என்பதால் கோடைகாலத்திலும் தடையின்றி தண்ணீர் பாய்ச்சினால் மட்டுமே மகசூல் கிடைக்கும்.
பருவ மழை சீராகப் பெய்து கிணற்று பாசனம் கை கொடுத்தால் கரும்புக்கு ஆண்டுதோறும் தடை இன்றி தண்ணீர் பாய்ச்ச முடியும். பருவ மழை பொய்க்கும் தருணங்களில் தண்ணீர் இன்றி கரும்பு கருகி பெருமளவு நஷ்டம் விவசாயிகளுக்கு ஏற்படுகிறது.
இந்த ஆண்டு 'எல் நினோ' பாதிப்பு காரணமாக தென்மேற்கு பருவமழை இதுவரை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் கிணற்றில் நீர்மட்டம் குறைந்து பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர்.
இது போன்ற தருணங்களில் கிடைக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெரும்வகையில் சொட்டுநீர் பாசனம் கை கொடுக்கிறது. இதனை செயல்படுத்த அரசு பல்வேறு மானியங்களை விவசாயிகளுக்கு வழங்கி உள்ளது.
இதில் 2.5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் குறு விவசாயிகள் என்றும் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்கள் சிறு விவசாயிகள் என்றும் வரையறை செய்யப்பட்டுள்ளது.
சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் அரசு மானியம் வழங்குகிறது. இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
சிறு குறு விவசாயிகளுக்கு இது 100 சதவீதம் வழங்கினாலும் இதற்கு சரியான வழிகாட்டுதலும் ஊக்கமும் வேளாண் துறை சார்பில் வழங்கப்படாததால் பெரும்பாலான விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசன முறையின் பயன் சென்றடையவில்லை.
இதனால் தண்ணீர் பற்றாக்குறை தருணங்களில் பயிரை பாதுகாக்க முடியாமல் பெருத்த நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது. அதேபோல் அரசியல் பின்புலம் உள்ளவர்களுக்கு மட்டுமே அரசுத் திட்டங்களும் சலுகைகளும் முழுமையாக கிடைப்பதாக விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு உள்ளது.
மாவட்டத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் சொட்டுநீர் பாசன முறையை நடைமுறைப்படுத்தி தண்ணீரை சிக்கனமாக பாய்ச்சினால் பருவ மழை பொய்த்தாலும் அதிக மசூலை பெற்று லாபம் ஈட்ட முடியும்.
நாளுக்கு நாள் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் இச்சூழ்நிலையில் சொட்டு நீர் பாசனத்தை செயல்படுத்த வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி போதிய ஆலோசனைகளை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும்.
குறிப்பாக பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளுக்கும் அரசின் திட்டங்கள் சென்றடைய உறுதுணையாக இருக்க வேண்டும்.
