/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பண்ணைகளில் கரும்பு நாற்று உற்பத்தி பணி... தீவிரம்:செம்மை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
/
பண்ணைகளில் கரும்பு நாற்று உற்பத்தி பணி... தீவிரம்:செம்மை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
பண்ணைகளில் கரும்பு நாற்று உற்பத்தி பணி... தீவிரம்:செம்மை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
பண்ணைகளில் கரும்பு நாற்று உற்பத்தி பணி... தீவிரம்:செம்மை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : டிச 05, 2025 05:43 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் செம்மை சாகுபடி முறையிலான கரும்புக்கு பண்ணைகளில் நாற்று உற்பத்தி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட் டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளது. இங்குள்ள விவசாயிகள் நெல், கரும்பு, மக்காச்சோளம், பருத்தி, மணிலா, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.
இதில், அதிகளவு விவசாயிகள் கரும்பு சாகுபடிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். அதற்கேற்ப கச்சிராயபாளையம் மற்றும் மூங்கில்துறைப்பட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும், திருக்கோவிலுாரில் தனியார் சர்க்கரை ஆலையும் இயங்கி வருகிறது. தற்போதைய சூழலில் விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் விவசாயிகள் இயந்திரங்களின் பயன்பாட்டினை கொண்டு விவசாயம் செய்வதில் முனைப்பு காட்டுகின்றனர்.
அதன்படி விவசாயிகள் பலர் செம்மை சாகுபடி முறையில் கரும்பு பயிரிடுகின்றனர். சாதாரண கரும்பு சாகுபடி செய்ய ஏக்கருக்கு 3 - 4 டன் எடையுள்ள கரும்பு தேவைப்படும். கரும்புகளை துண்டு, துண்டுகளாக வெட்டி நிலத்தில் நட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் செலவினம் அதிகரிப்பதுடன், விளைச்சல் குறைவாக இருக்கும். ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகமாக தேவைப்படுவதால் மண்ணின் தரமும் குறையும். களைகள் மற்றும் கரையான் தாக்குதல் அதிகமாக இருக்கும். சாதாரண நடவு முறையில் ஏக்கருக்கு 40 டன் வரை மட்டுமே கிடைப்பதால் விவசாயிகளுக்கு லாபம் குறைவாகவே கிடைக்கும்.
இதற்கு மாறாக செம்மை சாகுபடி முறையில் கரும்பு பயிரிட ஏக்கருக்கு 500 கிலோ எடை கொண்ட கரும்பு மட்டும் போதுமானதாக உள்ளது. பராமரிப்பு பணிகள் குறைவாகவும், அதிக மகசூல் கிடைப்பதால் விவசாயிகளுக்கு அதிக லாபம் அதிகரிக்கிறது. பயிர்கள் பாதிப்பின்றி வளர்வது மற்றும் அரசு மானியம் உள்ளிட்ட காரணங்களால் சாகுபடியின் பரப்பளவு அதிகரிக்கிறது. கரும்பு நாற்றினை உற்பத்தி செய்ய முதலில் பசுமை நிழல் வலை குடில் கூடாரம் அமைக்க வேண்டும். பருசீவல் செய்யப்பட்ட கரும்பு துண்டினை, ட்ரேவில் வைத்து அதில் எரு, மணல், இயற்கை உரம் போன்றவற்றை சேர்த்து கூடாரத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். 40 நாட்களுக்குள் கரும்பு நாற்று தயாராகி விடுகிறது. செம்மை சாகுபடி முறையில் பயிரிடுவதன் மூலம் ஏக்கருக்கு 60 முதல் 80 டன் வரை மகசூல் கிடைக்கிறது.
குறிப்பாக, செம்மை சாகுபடி முறையில் கரும்பு பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதனால், சிறு, குறு விவசாயிகள் பலர் செம்மை சாகுபடி முறையில் பயிர் செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கரும்பு நாற்று உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இங்கு சாதாரண கரும்பு நாற்றும், 86032, 90063, பொன்னகை ஆகிய ரக கரும்பு நாற்றுகளும் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு கரும்பு நாற்று 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதனால், விவசாயிகள் பலர் கரும்பு சாகுபடி செய்வதற்கான ஆயத்த பணிகளை விளைநிலங்களில் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையொட்டி பண்ணைகளில் கரும்பு நாற்று உற்பத்தி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

