ADDED : மார் 04, 2026 03:28 AM
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை அருகே யாசகம் பெற்று சுற்றித்திரிந்தவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
உளுந்துார்பேட்டை சங்கரலிங்கம் கோவில் அருகே உள்ள வேப்பமரத்தில் நேற்று முன்தினம் ஆண் நபர் துாக்கில் பிணமாக தொங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உளுந்துார்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த நிலையில் இருந்த ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்தனர்.
விசாரணையில் இறந்த நபர் கடலுாரை சேர்ந்த தங்கராசு மகன் புருஷொத்தமன், 45; என்பதும், கடந்த 2015ம் ஆண்டு மனைவி வள்ளியை பிரிந்ததால் மனமுடைந்து கடந்த 10 வருடங்களாக உளுந்துார்பேட்டை சங்கரலிங்க மடத்தில் சாப்பிட்டு அப்பகுதியில் யாசகம் பெற்று சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இது குறித்து வி.ஏ.ஓ., மோகன்ராஜ் அளித்த புகாரின் பேரில், உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
