/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாலிபரிடம் வழிப்பறி தஞ்சை ஆசாமிகள் கைது
/
வாலிபரிடம் வழிப்பறி தஞ்சை ஆசாமிகள் கைது
ADDED : மார் 18, 2025 04:17 AM

உளுந்துார்பேட்டை : விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பை சேர்ந்தவர் கருணாநிதி மகன் வினோத்,29; பி.இ., பட்டதாரி. சென்னை போரூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 15ம் தேதி கோயம்புத்துாரில் இருந்து சென்னைக்கு பைக்கில் சென்றார். உளுந்துார்பேட்டை அடுத்த ஒலையனுார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, பைக்கில் வந்த 4 பேர், வினோத் அணிந்திருந்த ஒரு சவரன் செயின், லேப் டாப், ஐபோன், ரொக்கப்பணம் ரூ 2,000 மற்றும் ஏ.டி.எம்., கார்டை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், கிடைத்த தகவலின் பேரில், வழிப்பறியில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாவட்டம், சோழபுரம் காரல்மார்க்ஸ்,34; அன்சாரி,30; ஆகியோரை நேற்று கைது செய்து, பைக், லேப் டாப், ஐபோனை பறிமுதல் செய்தனர்.
தொடர் விசாரணையில், அம்மையகரத்தில் லாரி டிரைவராக வேலை செய்த காரல்மார்க்ஸ், அவரது நண்பருடன் பஸ்சில் உளுந்துார்பேட்டை அடுத்த ஆசனுாருக்கு வந்தார். அங்கு, சோழபுரத்தில் இருந்து பைக்கில் வந்த அன்சாரி மற்றும் அவரது நண்பருடன் மது குடித்தனர்.
அங்கிருந்து காரல்மார்க்ஸ் உள்ளிட்ட 4 பேரும் ஒரே பைக்கில் உளுந்துார்பேட்டைக்கு செல்லும்போது வினோத்திடம் நகை, பணம் மற்றும் மொபைல் போனை வழிப்பறி செய்ததும், இவர்கள் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.