/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரூ. 10 கோடியில் கட்டிய பாலம் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும்... அவலம்: நிலம் கையகப்படுத்துவதில் வருவாய்த்துறை சுணக்கம்
/
ரூ. 10 கோடியில் கட்டிய பாலம் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும்... அவலம்: நிலம் கையகப்படுத்துவதில் வருவாய்த்துறை சுணக்கம்
ரூ. 10 கோடியில் கட்டிய பாலம் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும்... அவலம்: நிலம் கையகப்படுத்துவதில் வருவாய்த்துறை சுணக்கம்
ரூ. 10 கோடியில் கட்டிய பாலம் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும்... அவலம்: நிலம் கையகப்படுத்துவதில் வருவாய்த்துறை சுணக்கம்
ADDED : ஆக 28, 2025 02:25 AM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ. 10 கோடியில் கட்டி முடித்து திறந்து வைக்கப்பட்ட உயர்மட்ட பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவண்ணாமலை - - கள்ளக்குறிச்சி வரையிலான இரு வழி சாலையை நான்கு வழி சாலைகளாக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இதில் மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.10 கோடி மதிப்பில் உயர் மட்டம் பாலம் பல மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது.
இப்பாலத்தினை கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு, ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஆகியோர் திறந்து வைத்தனர். திறப்பு விழாவுக்கு பிறகு, ஓரிரு நாட்கள் மட்டும் பாலத்தின் மீது வாகனங்கள் சென்றன. அதன் பின் புதிய பாலத்தின் இரு முனைகளிலும் பேரிகார்ட் அமைத்து மூடப்பட்டது. இதனால் வாகனங்கள் பழைய மேம்பாலத்தின் வழியாக செல்கிறது.
ஒரு வழி பாதையில் வாகனங்கள் செல்லும்போது இப்பகுதியில் தினந்தோறும் விபத்துக்கள் நடந்து வருகிறது. இப்பாலத்தின் வடக்கு பகுதி திருவண்ணாமலை மாவட்ட எல்லையும், பாலத்தின் தெற்கு பகுதி கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் வருகிறது. இரு மாவட்டத்தின் எல்லை கோடாக தென்பெண்ணையாறு பாலம் உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு பணிகள் முழுமையாக முடிந்துள்ளது. இதனால் புதிய உயர்மட்ட பாலத்துடன் கூடிய இணைப்பு சாலை அமைக்கப்பட்டு விட்டது.
ஆனால் திருவண்ணாமலை மாவட்ட எல்லை பகுதியில் சாலைகள் முழுமையாக அமைக்கப்படாமல் உள்ளது. பாலத்தின் இணைப்பு சாலை அமைக்க தேவையான இடத்தில் உள்ள வீடுகள், கடைகள் அகற்றப்படவில்லை.
இதனால் இணைப்பு சாலை அமைக்க முடியாமல் தேசிய நெடுஞ்சாலைத்துறை திணறி வருகிறது.
இணைப்பு சாலை அமைய உள்ள இடத்தில் உள்ள பட்டா இடத்தினை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தால் அகற்ற முடியாததால் மேம்பாலத்திற்கான இணைப்பு சாலை அமைக்க முடியாமல் உள்ளது. இதனால் 10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி அமைச்சரால் திறக்கப்பட்ட உயர்மட்ட பாலம், 4 மாதங்கள் கடந்தும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது.

