/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்டத்தில் கால்நடைகள் எண்ணிக்கை குறைகிறது! பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை தேவை
/
மாவட்டத்தில் கால்நடைகள் எண்ணிக்கை குறைகிறது! பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை தேவை
மாவட்டத்தில் கால்நடைகள் எண்ணிக்கை குறைகிறது! பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை தேவை
மாவட்டத்தில் கால்நடைகள் எண்ணிக்கை குறைகிறது! பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை தேவை
ADDED : நவ 14, 2025 11:15 PM

தியாகதுருகம்: கால்நடை வளர்ப்பு சவாலாக மாறிவரும் சூழ்நிலையில் மாவட்டத்தில் மாடுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதால் விவசாயிகளை ஊக்குவித்து பால் உற்பத்தியைப் பெருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழில். இதனை சார்ந்து பசுக்களை வளர்த்து பால் உற்பத்தி செய்து விவசாயிகள் லாபம் அடைந்து வருகின்றனர். பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளில் கால்நடைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மாவட்டத்தில் 3 லட்சத்து 36 ஆயிரம் மாடுகள் இருந்தன.
இவ்வாண்டு கணக்கின்படி 2 லட்சத்து 98 ஆயிரம் மாடுகள் மட்டுமே உள்ளன. கடந்த ஐந்தாண்டில் 42 ஆயிரம் மாடுகள் குறைந்துள்ளன.
இதுகுறித்து கால்நடைத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது;
கால்நடை வளர்ப்பு கடந்த சில வருடங்களாக மிகுந்த சவாலாக மாறி உள்ளது. வைக்கோல், வேர்க்கடலை செடிகள், கம்பு, சோளம் ஆகியவற்றின் தட்டைகள் மாடுகளுக்கு உலர் தீவனமாகவும், வேலிமசால், குதிரை மசால், மக்காச்சோளம், நேப்பியர் புல் போன்ற புரதசத்து நிறைந்த பசுந்தீவனங்களை வளர்த்து மாடுகளுக்கு கொடுக்கின்றனர். தரமான பால் உற்பத்திக்காக அடர் தீவனங்களை கடைகளில் வாங்கி வழங்குகின்றனர்.
அதேபோல் ஆடு, மாடுகளை அருகில் உள்ள மேய்ச்சல் நிலங்களில் உணவுக்காக மேய விடுகின்றனர். ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி காரணமாக தரிசு நிலங்கள் வீட்டுமனைகளாக மாறியதால் மேய்ச்சல் நிலங்களின் பரப்பு குறைந்துவிட்டது. மீதமுள்ள மேய்ச்சல் நிலங்களில் கோடை காலங்களில் புற்கள் கருகி கட்டாந்தரையாகி விடுகிறது.
இதன் காரணமாக கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல் மற்றும் தீவனங்களை அதிக அளவில் வாங்கி சேமித்து வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. நெல் அறுவடைக்குப் பிறகு இயந்திரங்களைக் கொண்டு வைக்கோலை உருளை போல் சுருட்டி கட்டுவதால், அதனை நீண்ட தொலைவுக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடிகிறது.
இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வைக்கோலை அதிக விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். இது உள்ளூரில் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதனால், வேறு வழியின்றி உலர் தீவனங்களை அதிக விலை கொடுத்து வாங்கி சேமித்து வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
கால்நடைகளை பராமரிப்பதற்கு குடும்ப உறுப்பினர்கள் இணைந்து வேலை செய்தால் மட்டுமே பால் உற்பத்தி மூலம் லாபம் ஈட்ட முடியும். தற்போதுள்ள சூழ்நிலையில் பலர் கிராமங்களில் இருந்து நகர் புறங்களுக்கு சென்று வேலை செய்வதில் ஆர்வம் காட்டுவதால் கால்நடைகளை பராமரிப்பதற்கு ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது.
பருவ மழை போதிய அளவு பெய்யாமல் போனால் நெல் சாகுபடி குறைந்து வைக்கோல் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அடர் தீவனங்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பால் உற்பத்தியாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாடுகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக குறைந்து வருகிறது என்று தெரிவித்தார்.
மாடுகளை பராமரிக்க முடியாத சில விவசாயிகள் பசுக்களை கூட இறைச்சிக்கு விற்பனை செய்யும் அவலம் நடந்தேறி வருகிறது. இதே நிலைத் தொடர்ந்தால் மாவட்டத்தில் பால் உற்பத்தி சரியும் அபாயம் ஏற்படும்.
இதனை கருத்தில் கொண்டு பால் உற்பத்தியை பெருக்க கால்நடை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் இணைந்து களத்தில் இறங்கி செயலாற்ற வேண்டியது அவசியமாகி உள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது;
பசுக்களை மானிய விலையில் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தி கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகளை கண்டறிந்து கிராமங்கள் தோறும் அதிக எண்ணிக்கையில் பசுக்கள் மற்றும் கலப்பின கன்றுகளை குறைந்த விலைக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அடர் தீவனங்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
வயல்களிலேயே பசுந்தீவனங்களை வளர்க்க பயிற்சி அளிப்பதோடு அதற்கு தேவையான இடு பொருட்களை வேளாண் துறை வழங்கி விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். அடர் தீவன உற்பத்தி ஆலைகளை மாவட்டத்தில் நிறுவ வேண்டும்.
கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சையும், வாரந்தோறும் கால்நடை டாக்டர்கள் கிராமங்களுக்கு நேரடியாக சென்று கால்நடைகளுக்கு நோய் தொற்று உள்ளதா என்பதை கண்டறிந்து உரிய சிகிச்சையும் அளிக்க வேண்டும்.
ஏரி, குளம் உள்ளிட்டநீர்பிடிப்பு பகுதிகளில் அதை ஒட்டி உள்ள தரிசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யாமல் பாதுகாத்தால் கால்நடைகள் மேய்வதற்கு ஏற்ற சூழல் உருவாகும். இதனால் விலை கொடுத்து பசுந்தீவனங்களை வாங்க வேண்டிய நிலையை தவிர்க்க முடியும். கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம் நடத்தி பசு வளர்ப்பு மற்றும் நவீன பராமரிப்பு எளிய முறைகள், பால் உற்பத்தி மூலம் கிடைக்கும் வருவாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்த படியாக கால்நடை வளர்ப்பும் அதை சார்ந்த பால் உற்பத்தியும் முக்கிய ஜீவாதாரமாக விவசாயிகளுக்கு வாழ்வளித்து வருகிறது. பால் உற்பத்தியைப் பெருக்கவும், கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

