தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/தென்கீரனுார் ஏரியில் பாலம் கட்டுவதற்கான பணிகள் துவக்கம்:விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

தென்கீரனுார் ஏரியில் பாலம் கட்டுவதற்கான பணிகள் துவக்கம்:விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

தென்கீரனுார் ஏரியில் பாலம் கட்டுவதற்கான பணிகள் துவக்கம்:விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை


UPDATED : ஆக 30, 2026 03:32 PM

ADDED : ஆக 30, 2026 03:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2026 03:32 PM ADDED : ஆக 30, 2026 03:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ரயில் நிலையம் அமைப்பதற்காக தென்கீரனுார் ஏரியில் பாலம் கட்டுவதற்கான அடித்தள பணி துவங்கியது.

கள்ளக்குறிச்சி-சின்னசேலம் ரயில் பாதை திட்டத்தில், 17.4 கி.மீ., துாரம் புதிய ரயில் பாதை அமைக்க கடந்த, 2015ம் ஆண்டு ரூ.116 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள், கடந்த, 2017ம் ஆண்டு துவங்கின.

சின்ன சேலத்திலிருந்து, கள்ளக்குறிச்சிக்கு முன்னதாக உள்ள, பொற்படாகுறிச்சி வரை, 12.1 கி.மீ., துாரத்திற்கு, 2 பெரிய பாலங்கள், 23 சிறிய பாலங்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது.

பொற்படாகுறிச்சியில் ரயில் நிலையம் வரை, ரயில் பாதை பணிகள் முடிந்து கடந்த 2025ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் சின்னசேலத்திலிருந்து, பொற்படாகுறிச்சி வரை ரயில் வெள்ளோட்டமும் விடப்பட்டது. ஆனால் சின்னசேலம்-கள்ளக்குறிச்சி ரயில்பாதை திட்டம் முழுமை பெறாமல் இருந்ததால் இத்தடத்தில் புதிய ரயில்களை இயக்க முடியாமல் இழுபறியில் இருந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டி வந்தது.

அதனைத் தொடர்ந்து விடுப்பட்டு போன பொற்படாக்குறிச்சியிலிருந்து கள்ளக்குறிச்சி வரையிலான, 5.3 கி.மீ., துாரம் ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்கு கடந்த, 2025ம் ஆண்டு ஆக.16ம் தேதி, ரூ.131.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரயில் பாதை அமைக்க தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கியது.

கள்ளக்குறிச்சி, விநாயகா நகர் பகுதியில் ரயில் நிலையம் அமைப்பதற்கான முகாந்திரமாக, எம்.ஆர்.என்., நகர் அருகே மகாலட்சுமி நகர் முடிவில் ரயில் பாதை கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் கட்டப்பட்டது. அத்துடன் இந்த ரயில் வழித்தடத்தில், 5 இடங்களில் பெரிய பாலங்கள், 9 இடங்களில் சிறிய பாலங்கள் என மொத்தம், 14 பாலங்கள் அமைப்பதற்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டது.

அதன்படி இந்த ரயில் வழித்தடத்தில் கள்ளக்குறிச்சி புதிய பஸ் நிலையம் பின்புறம், தச்சூர், ஏமப்பேர் என மொத்தம், 3 இடங்களில் பெரிய பாலங்களுக்கான கட்டுமான பணிகள் துவங்கி தற்போது நிறைவுபெறும் தருவாயில் உள்ளன.

அத்துடன் தென்கீரனுார் ஏரி மீது பெரிய பாலம் அமைப்பதற்காக அடித்தளம் அமைக்கும் பணிகளும் துவங்கப்பட்டன.

தென்கீரனுார் ஏரி அருகே பாலம் கட்டுவதற்காக ஜே.சி.பி., இயந்திரம் மூலம் பள்ளங்கள் தோண்டி 'கான்கிரீட்' தளம் அமைத்து அடித்தளம் அமைப்பதற்கான ஆயத்த பணிகளை தென்னக ரயில்வே சேலம் கோட்ட நிர்வாக பொறியாளர் தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர் பார்வையிட்டனர்.

அத்துடன் கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் ரயில் நிலையம் அமைப்பதற்கான இடம் கையகப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்திட கலெக்டரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைந்து முடியும்பட்சத்தில் துருகம் சாலையில் மேம்பாலமும், விநாயகா நகர் பகுதியில் ரயில்வே ஸ்டேஷனும் கட்டப்பட்டு, கள்ளக்குறிச்சி-சின்னசேலம் ரயில்பாதை பணிகள் வரும் 2028 மார்ச் மாதம் முழுமையாக நிறைவுபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன் கள்ளக்குறிச்சியிலிருந்து திருவண்ணாமலைக்கு ரயில்பாதை அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கிட சாத்தியக்கூறுகள் இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் கள்ளக்குறிச்சியில் ரயில் நிலையம் வருவதற்காக கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக ஏங்கி தவித்த இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us