/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உளுந்துார்பேட்டையில் திருட்டு: 6 பேர் கைது
/
உளுந்துார்பேட்டையில் திருட்டு: 6 பேர் கைது
ADDED : டிச 16, 2024 04:43 AM

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, உளுந்துார்பேட்டை விருத்தாசலம் சாலையில் மேம்பாலத்தில் நின்றிருந்த காரில் மது போதையில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.
அவர்களிடம் பூட்டை உடைக்க பயன்படுத்தும் இரும்பு ராடுகள் வைத்திருந்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் ஒரே காரில் வந்ததும், 3 பேர் பூட்டிய வீட்டினை நோட்டமிட்டு திருடுவதற்காக சென்றதும், அவர்களுக்கு தகவல் அளிப்பதற்காக 3 பேர் காரில் இருந்ததும் தெரிந்தது.
உடனடியாக செயல்பட்ட போலீசார், உளுந்துார்பேட்டை அன்னை தெரசா நகர் பகுதியில் உள்ள ஒருவரது வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை திருடிய 3 பேரை பிடித்தனர்.
பிடிபட்டவர்கள் கடலுார் சாலைக்கரை தனுஷ் மகன் சாய்குமார், 24; குழந்தைகுப்பம் கணேசன் மகன் ரவிச்சந்திரன், 24; அண்ணாநகர் கிருஷ்ணமூர்த்தி மகன் மதியழகன், 21; காமாட்சிபேட்டை பாலமுருகன் மகன் பாலசுப்ரமணியன், 21; மற்றும் 2 சிறுவர்கள் என தெரியவந்தது. உடன் 6 பேர் மீதும் வழக்குப் பதிந்து, கைது செய்து, அவர்களிடமிருந்த இரும்பு ராடுகள், வெள்ளி பொருட்கள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைதான 6 பேர் மீதும் பண்ருட்டி, நெய்வேலி, வடலுார், சிதம்பரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது.