/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆட்டு சந்தைக்கு செல்ல வழி இல்லை; பொதுமக்கள், வியாபாரிகள் தவிப்பு
/
ஆட்டு சந்தைக்கு செல்ல வழி இல்லை; பொதுமக்கள், வியாபாரிகள் தவிப்பு
ஆட்டு சந்தைக்கு செல்ல வழி இல்லை; பொதுமக்கள், வியாபாரிகள் தவிப்பு
ஆட்டு சந்தைக்கு செல்ல வழி இல்லை; பொதுமக்கள், வியாபாரிகள் தவிப்பு
ADDED : ஜூன் 06, 2025 07:39 AM

உளுந்தூர்பேட்டை; உளுந்தூர்பேட்டையில் ஆட்டு சந்தைக்கு செல்ல பாதை மற்றும் வாகனங்களை நிறுத்த இட வசதி இல்லாததால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை, சேலம் சாலையில் டி.எஸ்.பி., அலுவலகம் எதிரே உள்ள பெரிய ஏரி பகுதியில் புதன்கிழமை தோறும் ஆட்டு சந்தை நடக்கிறது.
இங்கு தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, ஆத்துார், கடலுார், பண்ருட்டி, திருக்கோவிலுார், கண்டாச்சிபுரம், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆடுகளை விற்க விவசாயிகள் வருகின்றனர். அதேபோல, வியாபாரிகளும் ஏராளமானோர் சந்தையில் குவிந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர். பண்டிகை காலங்களில் இந்த சந்தை களை கட்டும். இந்நிலையில், சந்தை நடக்கும் இடத்திற்கு செல்ல, போதிய பாதை வசதி இல்லை.
அதனால், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை சாலையோரம் மற்றும் டி.எஸ்.பி., அலுவலக நுழைவு வாயில் பகுதிகளில், நிறுத்தி விட்டு சந்தைக்கு செல்கின்றனர். இதன் காரணமாக சேலம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'சந்தைக்கு வரும் ஆடு ஒன்றுக்கு, ரூ.50 டோக்கனாக, நகராட்சி நிர்வாகம் வசூல் செய்கிறது. ஆனால் அங்கு பாதை மற்றும் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.