/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் வளர்ச்சி திட்ட பணிகள் மந்தம்! விரைந்து முடிக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
/
திருக்கோவிலுார் வளர்ச்சி திட்ட பணிகள் மந்தம்! விரைந்து முடிக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
திருக்கோவிலுார் வளர்ச்சி திட்ட பணிகள் மந்தம்! விரைந்து முடிக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
திருக்கோவிலுார் வளர்ச்சி திட்ட பணிகள் மந்தம்! விரைந்து முடிக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 18, 2025 11:30 PM

திருக்கோவிலுார் எந்த மாவட்ட எல்லைக்குள் வருகிறது என்ற சந்தேகம் மெத்த படித்தவர்களுக்கு மட்டுமின்றி, அரசியலை நன்கு அறிந்தவர்களுக்கும் தற்பொழுது ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் திருக்கோவிலுார் தொகுதி முழுவதும் ஒரே மாவட்டத்தில் இடம்பெற வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை.
இந்நிலையில், திருக்கோவிலுாரில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு நேரடி பஸ் போக்குவரத்து உள்ளது. ஆனால், தற்போதைய பஸ் நிலையம் போதுமானதாக இல்லை. புதிய பஸ் நிலையம் ஏற்படுத்த வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இதனை ஏற்ற புதிய பஸ் நிலையத்திற்கான அறிவிப்பு மானிய கோரிக்கை கூட்டத்தொடரின் போது அறிவிக்கப்பட்டது. அதற்கான கட்டுமான பணியை விரைவாக துவங்க வேண்டும் என்பது மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
இதேபோல் போலீஸ் நிலையம் பக்கத்தில் உள்ள பாழடைந்த காந்தி திருமண மண்டபத்தை அகற்றிவிட்டு, வணிக வளாகம் கட்டப்படும் என்ற அறிவிப்பும் கிடப்பில் உள்ளது. திருக்கோவிலுார், கீழையூர் - அரகண்டநல்லுார் இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் ரூ.112 கோடியில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டமும் துவங்கப்படாமல் உள்ளது.
அரசால் அறிவிக்கப்பட்டு காலதாமதமாகும் திட்டங்கள் இவை என்றால், பணிகள் துவங்கி நிறைவடையாத திட்டங்களும் நிறைய உள்ளது.
குறிப்பாக ரூ. 54 கோடி மதிப்பில், ஆறு தளங்களுடன், இரண்டு பிளாக்குகளாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுப்புறத்தைச் சேர்ந்த கிராம மக்கள் மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதேபோல் சந்தப்பேட்டையில் 1.53 ஹெக்டேர் பரப்பளவில், ரூ. 15.58 கோடி மதிப்பில் 49 ஆயிரத்து 593 சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்கள் கொண்ட அரசு கலை கல்லுாரி கட்டுமான பணியும் தாமதமாக நடந்து வருகிறது. தெப்பக்குளம் ரூ. 3 கோடியில் சீரமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இப்படி அரசு அறிவித்து செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் மந்த கதியில் நடந்து வரும் நிலையில், மக்களின் கோரிக்கை அடங்கிய திட்டங்கள் ஏராளமாக உள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலகம் துவங்க வேண்டும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சியாக இருந்தபோது தயாரான பாதாள சாக்கடை திட்டம், நகராட்சியாக தரம் உயர்ந்த பின்பும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லை.
ஏரி மற்றும் தென்பெண்ணையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் கால்வாய் வசதி மேம்படுத்துதல், ஏரியை மேம்படுத்தி பொழுதுபோக்கு பூங்கா மற்றும் படகு சவாரி, போக்குவரத்து மிகுந்த திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றல், திருக்கோவிலுாரில் அகழ்வாய்வு செய்து மீட்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் வாடகை கட்டிடத்தில் பூட்டி வைத்திருக்கும் நிலையில், சொந்த கட்டிடம் அமைத்து அருங்காட்சியகம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் நிலுவையில் உள்ளது.
அரசு அறிவித்து ஆமை வேகத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கும் வளர்ச்சிப் பணி திட்டங்களை விரைவாக முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் இன்னும் துவங்கப்படாமல் இருப்பதை விரைந்து துவங்கவும், மக்களின் அத்தியாவசிய கோரிக்கைகள் அடங்கியது திட்டங்களை செயல்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது திருக்கோவிலுார் மட்டும் இன்றி சுற்றுவட்டார கிராம மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.