/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் அணைக்கட்டு... சேதம்; சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
/
திருக்கோவிலுார் அணைக்கட்டு... சேதம்; சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
திருக்கோவிலுார் அணைக்கட்டு... சேதம்; சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
திருக்கோவிலுார் அணைக்கட்டு... சேதம்; சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : டிச 18, 2024 07:54 AM

தென் பெண்ணையாற்றின் குறுக்கே சாத்தனுார் அணைக்கு அடுத்தபடியாக திருக்கோவிலுார் தடுப்பணை உள்ளது. இதன் மூலம் பம்பை, மலட்டாறு, ராகவன், மருதுார், சித்தலிங்கமடம் வாய்க்கால் என ஐந்து வழித்தடங்களில் தண்ணீர் திருப்பி விடப்படுகிறது. 98 ஏரிகளுக்கு, நேரடியாக தண்ணீர் செல்கிறது. 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
அதேபோல் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனத்தின் மூலம் பயன் பெறுகிறது.
மேலும் நிலத்தடி நீர்மட்டம் மேம்பட்டு விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் கரும்பு, வேர்க்கடலை, நெல் என விளைபொருட்கள் ஆண்டு முழுவதும் பயிர்விக்க மிகப்பெரும் பயனுள்ள அணையாக உள்ளது.
கடந்த 2ம் தேதி சாத்தனுார் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 68 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.
அத்துடன் சேர்ந்து திருக்கோவிலுார் அணைக்கட்டின் வழியாக 2 லட்சத்து 35 ஆயிரம் கன அடி நீர் வெளியேறியது.
இந்த சூழலில் ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் அணையை கடந்து செல்ல முடியாமல், அணையின் வலதுபுற கரையை உடைத்துக் கொண்டு ஏமப்பேர் வழியாக வெளியேறி, மீண்டும் தென்பெண்ணை ஆற்றில் கலந்தது.
அணைக்கட்டின் மண் கரை உடைந்ததால் ஏமப்பேர் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் செல்வதை தடுக்கும் வகையில், நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் தமிழ்ச்செல்வன், உதவி செய்ய பொறியாளர் ஐயப்பன் நேரடி மேற்பார்வையில் கரையை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், ஆற்றில் வரும் நீரில் வேகத்தை குறைக்கும் வகையில், சாத்தனுார் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடந்த 16ம் தேதி காலை நிறுத்தப்பட்டது.
ஆற்றில் தண்ணீர் வடிந்த நிலையில், அதிகாரிகள் அணையை ஆய்வு செய்தனர். அணைக்கட்டின் அனைத்து பகுதிகளும் முழுமையாக சேதம் அடைந்திருந்தது தெரியவந்தது.நேற்று முன்தினம் இரவு முழுதும் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டு வரப்பட்ட கல் மற்றும் ஜல்லி, மண் மூலம் கரை கட்டும் பணி நடந்தது. இது நேற்று மதியம் ஒரு மணியை கடந்தும் நீடித்தது.
இந்நிலையில் சாத்தனுார் அணையில் இருந்து நேற்று காலை அணையின் பாதுகாப்பு கருதி 1000 கன அடி நீர் திறக்கப்பட்டது. நேற்று மாலை திருக்கோவிலுார் அணைக்கட்டை வந்தடையும் என்பதால் அதற்குள் கரையை முழுமையாக கட்டி முடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.இருப்பினும், தண்ணீரின் வேகத்தில் கரை கட்டுவது நீர்வளத் துறைக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.
திருக்கோவிலுார் அணைக்கட்டின் மூலம் திருப்பப்படும் தண்ணீர் பம்பை வாய்க்கால் மூலம் புதுச்சேரி மாநிலம், வாதனுார் வரையும், ராகவன் வாய்க்கால் மூலம் திருப்பப்படும் தண்ணீர் திருநாவலுார் வரையிலும், மலட்டாறு மூலம் திருப்பப்படும் தண்ணீர் எலந்தம்பட்டு, சிறுவாத்துார் வரையிலும் செல்கிறது.
அணையை முழுமையாக சீரமைக்க தோராயமாக 180 கோடி ரூபாய் செலவாகும் என நீர்வளத்துறை கணக்கிட்டிருக்கும் நிலையில். அரசு போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.