/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நுாறாண்டு கண்ட திருக்கோவிலுார் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை உருவாக்கி சாதனை
/
நுாறாண்டு கண்ட திருக்கோவிலுார் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை உருவாக்கி சாதனை
நுாறாண்டு கண்ட திருக்கோவிலுார் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை உருவாக்கி சாதனை
நுாறாண்டு கண்ட திருக்கோவிலுார் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை உருவாக்கி சாதனை
ADDED : ஆக 16, 2025 11:46 PM

தி ருக்கோவிலுாரில் கடந்த 1924ம் ஆண்டு போர்டு பள்ளியாக துவங்கப்பட்டு, இன்று கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என்ற பெயருடன், கடந்த ஆண்டு நுாற்றாண்டு விழாவை முன்னாள் மாணவர்கள் அமைப்பின் சார்பில் மிக சிறப்பாக கொண்டாடிய பழமைக்கும், பெருமைக்கும் உரிய பள்ளியாக உள்ளது.
சங்க பாடல்களில் அதிக பாடல்கள் பாடியவர் கபிலர். அவர் வாழ்ந்து மறைந்த திருக்கோவிலுாரில் அவர் வழியில் பல எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., நீதிபதிகள் என பலரையும் உருவாக்கிய பெருமை இப்பள்ளிக்கு சேரும்.
கடந்த ஆண்டு நடந்த பள்ளியின் நுாற்றாண்டு விழாவில், முன்னாள் மாணவர்கள் அமைப்பின் சார்பில் பல ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பொறியியல் வல்லுநர்கள், அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்கள் என பலரும் பங்கேற்று பள்ளிக்கு பெருமை சேர்த்ததுடன், தனியார் பள்ளிக்கு இணையாக டிஜிட்டல் வகுப்பறைகள் உள்ளிட்ட நவீன வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து மகிழ்ந்தனர்.
தற்போதைய நிலையில் இப்பள்ளியில் படித்து, உயர் பதவியில் இருப்பவர் பட்டியலில் சென்னை பெருநகர ஆணையர் குமரகுருபரன் ஐ.ஏ.எஸ்., புதுச்சேரி கவர்னரின் செயலாளராக பணியாற்றி, டில்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நெடுஞ்செழியன் ஐ.ஏ.எஸ்., புதுச்சேரி மண்டல வருமான வரித்துறை ஆணையராக பணியாற்றும் அன்பழகன் ஐ.ஆர்.எஸ்., தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சண்முகசுந்தரம் ஐ.ஏ.எஸ்., இளஞ்செழியன் பஞ்சாப் மாநில ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
அரவிந்தன் மாவட்ட வருவாய் அலுவலர் என பல உயர் பதவிகளில் ஏராளாமான முன்னாள் மாணவர்கள் உள்ளனர்.
அதேபோன்று அரசியலிலும் பலர் கோலோச்சி இருந்தனர். முன்னாள் எம்.பி., ஆதிசங்கர், மறைந்த சிவராஜ் எம்.எல்.ஏ., என பலரை கூறலாம்.
கல்வியுடன் கலை, விளையாட்டு, சேவை பண்பை ஊக்குவிக்கும் வகையில் குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளும் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. சேவை பண்பை ஊக்குவிக்கும் வகையில் என்.எஸ்.எஸ்., மூலம் கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்தி கல்வியுடன் நற்பண்பையும் உருவாக்கி சிறந்த மாணவர்களை உருவாக்கும் போதி மரமாக இப்பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இப்பள்ளிக்கு தேவையான வகுப்பறை வசதிகளை முன்னாள் அமைச்சர் பொன்முடி தொகுதி மேம்பாட்டு நிதியில் செய்து கொடுத்துள்ளார்.
இத்தனை பெருமைக்கும் உரித்தான இப்பள்ளியில் படித்து, இங்கே தலைமை ஆசிரியராக பணியாற்றும் பாஸ்கரன் பணி சிறப்பு மிக்கது. ஆசிரியர்களின் சிறந்த சேவையால், பல சாதனை மாணவர்களை உருவாக்கிய பெருமை இப்பள்ளிக்கு உண்டு என்றால் மிகை ஆகாது.
முன்னாள் மாணவர்
என்பதில் மகிழ்ச்சி
இப்பள்ளியில் பயின்ற பலர் இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் உயர் பதவியில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு உயர்ந்துள்ளனர். தமிழகத்தை நாட்டின் முன்னணி மாநிலமாக உயர்த்தும் உறுதியுடன் செயல்படும் தமிழக அரசுக்கு உறுதுணையாக இருந்து பெரும் பங்காற்றி வரும் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் உள்ளனர். அதேபோல் பல தொழிலதிபர்களையும், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை நிர்வகிக்கும் பலரையும் இப்பள்ளி உருவாக்கி இருக்கிறது. நான் நகராட்சி சேர்மேனாக உயர்வதற்கு இப்பள்ளி தான் உறுதுணையாக இருந்தது. பள்ளியின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றும் வகையில், பள்ளி கட்டடங்கள், மைதானம் முழுவதும் பார்க்கிங் டைல்ஸ் என தனியார் பள்ளிக்கு நிகராக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி. -முருகன், திருக்கோவிலுார் நகர மன்ற தலைவர்.
நீட் தேர்வில் தமிழக அளவில்
முதலிடம் பிடித்த மாணவர்
இப்பள்ளியில் பயின்று ஆசிரியராக பணியாற்றி இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணி செய்வதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. என்னை உருவாக்கிய இப்பள்ளிக்கு என்னால் இயன்ற வளர்ச்சியையும் பெருமையையும் பெற்றுத் தர வேண்டும் என்ற உறுதியுடன் பள்ளி நிர்வாகத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். இதற்கு முன்னர் இருந்த பெருமைமிகு தலைமை ஆசிரியர்களின் பணி பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது. பல அதிகாரிகளையும், கல்வியாளர்களையும், இலக்கியவாதிகளையும் உருவாக்கிய அதே உறுதியுடன் தற்பொழுது பயிலும் மாணவர்கள் மாநில அளவில் உயர வேண்டும் என்ற உறுதியுடன் ஆசிரியர்களை வழிநடத்தி வருகிறேன். ஆசிரியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியதன் காரணமாக இப்பள்ளியில் பயின்ற மாணவர் திருமூர்த்தி அரசு பள்ளிகள் ஒதுக்கீட்டில் நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. -பாஸ்கரன், தலைமை ஆசிரியர்.
பள்ளி வளர்ச்சிக்கு
உறுதுணையாக இருப்பேன்
திருக்கோவிலுாரில் பிறந்து வளர்ந்து இப்பள்ளியில் பயின்று, முன்னாள் மாணவராக இருந்து, கூட்டுறவுத் துறையில் செயலாளராக பணியாற்றி, தற்போது பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக இருப்பதில் மகிழ்ச்சி. இப்பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவனின் எதிர்காலமும் ஜொலிக்க வேண்டும் என்பதுடன், இந்த சமூகத்திற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் சிறந்த மாணவர்களை திறமையான ஆசிரியர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்துடன் மாணவர்கள் வழி நடத்தப்படுவதால், அதிக மதிப்பெண் பெற்று தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு ஒழுக்கம் நிறைந்த மாணவர்களாக விளங்குவதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அதிக அளவில இப்பள்ளியில் சேர்க்கின்றனர். பெற்றோர்களின் கனவை நனவாக்க பள்ளிக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, ஆசிரியர்களை ஊக்கப்படுத்தி பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன். -சண்முகம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்.