/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அச்சுறுத்தும் வானுயர கொடி கம்பங்கள்; கட்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுமா?
/
அச்சுறுத்தும் வானுயர கொடி கம்பங்கள்; கட்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுமா?
அச்சுறுத்தும் வானுயர கொடி கம்பங்கள்; கட்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுமா?
அச்சுறுத்தும் வானுயர கொடி கம்பங்கள்; கட்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுமா?
ADDED : அக் 07, 2025 12:39 AM
பொ து இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த அரசியல் கட்சி கொடி கம்பங்களால் மக்களுக்கு சிரமம் ஏற்படுவதால் கட்சி கொடி கம்பங்களை அகற்ற கடந்த ஜன., மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்கள் அதிரடியாக அகற்றப்பட்டன.
இந்நிலையில் தி.மு.க., அ,தி.மு.க., பா.ம.க., வி.சி., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொது இடங்களில் இருந்து அகற்றப்பட்ட கொடிக்கம்பங்களை தங்கள் கட்சியினரின் சொந்த இடத்தில் நிறுவி வருகின்றனர். இவை 20 அடி உயரம் முதல் 100 அடி 126 அடி என பிரம்மாண்டமாக அமைத்து தங்களின் பலத்தை கொடி கம்பத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். கட்சியினருக்குள் ஏற்பட்ட போட்டோ போட்டியால் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பிரம்மாண்ட உயரம் கொண்ட கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உயரமான கொடி கம்பம் அமைக்கும்போது, அதன் உறுதி தன்மை சோதிக்காமல் அவசர கதியில் அஸ்திவாரம் அமைத்து விடுகின்றனர். அவ்வாறு சமீபத்தில் திருச்சியில் நடந்த த.வெ.க., மாநாட்டில் கொடி கம்பத்தை துாக்கி நிறுத்தும் போது கீழே விழுந்து சேதம் அடைந்தது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கட்சி நிர்வாகி கார் சேதமானது. காருக்குள் ஆட்கள் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.
இந்நிலையில் உளுந்துார்பேட்டை புறவழிச் சாலை சந்திப்பு இடத்தில் சில மாதங்களுக்கு முன் அ.தி.மு.க., சார்பில் 126 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு, கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி கொடியை ஏற்றி வைத்தார். இந்நிலையில் கடந்த 3ம் தேதி இரவு உளுந்துார்பேட்டையில் பெய்த மழையால் கொடிக்கம்பம் கீழே சாய்ந்தது. கொடி கம்பம் அருகில் குடியிருப்பு எதுவும் இன்றி, வெட்ட வெளியாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அரசியல் கட்சியினர் நகரின் முக்கிய இடங்களில் இது போன்ற பிரம்மாண்ட கொடி கம்பங்களை தனி நபருக்கு சொந்தமான பட்டா இடங்களில் அமைத்துள்ளனர்.
இதன் அஸ்திவாரம் தரமாக உள்ளதா, பல நுாறு கிலோ எடையுள்ள உயரமான கொடி மரத்தை தாங்கிப் பிடிக்கும் அளவுக்கு உறுதித் தன்மையோடு அமைக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மரம், கட்டடங்களை தாண்டி கொடி கம்பங்கள் உயரமாக இருப்பதால், மழைக்காலத்தில் இதன் மீது மின்னல் தாக்கும் அபாயம் உள்ளது.
உச்சியில் பறக்க விடும் கட்சி கொடியும் அகலமாக உள்ளதால் காற்று பலமாக வீசும் போது அதே திசையில் கொடி வேகமாக பறப்பதால் ஏற்படும் உந்துவிசையால் கம்பத்தை சாய்த்து விட வாய்ப்புள்ளது. பட்டா இடமாக இருந்தாலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இது போன்ற பிரம்மாண்ட கொடி கம்பங்களை குடியிருப்புகளையொட்டி அமைப்பதற்கு அரசு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு செய்யும் சேவையால் அவர்களின் மனதில் உயர்ந்து நிற்பதே உண்மையான செல்வாக்கு என்பதும், இது போன்ற பிரம்மாண்ட கொடிக்கம்பங்களை அமைப்பதால் மட்டும் மக்களின் ஆதரவை பெற முடியாது என்பதை அரசியல் கட்சியினர் உணர வேண்டும்