தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ஓட்டு எண்ணிக்கையையொட்டி அரசியல் கட்சியினர்... திக்... திக்... பலன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் வேட்பாளர்கள்

ஓட்டு எண்ணிக்கையையொட்டி அரசியல் கட்சியினர்... திக்... திக்... பலன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் வேட்பாளர்கள்

ஓட்டு எண்ணிக்கையையொட்டி அரசியல் கட்சியினர்... திக்... திக்... பலன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் வேட்பாளர்கள்


UPDATED : மே 04, 2026 05:15 AM

ADDED : மே 03, 2026 04:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 04, 2026 05:15 AM ADDED : மே 03, 2026 04:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் பிரதான கட்சி வேட்பாளர்கள் பலத்த எதிர்பார்ப்புடன் திக்... திக்..., மன நிலையில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய 4 தொகுதிகள் உள்ளது. சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானதும் பிரதான கட்சி மற்றும் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

அதன்படி, மாவட்டத்தில் உளுந்துார்பேட்டை, சங்கராபுரம் ஆகிய 2 தொகுதிகளில் தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளிடையே நேரடி மோதல் ஏற்பட்டது. ரிஷிவந்தியத்தில் தி.மு.க., - பா.ம.க., கட்சிகளிடையேவும், கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் அ.தி.மு.க., - வி.சி., கட்சிகளிடையேவும் போட்டி உள்ளது.

இதுதவிர, முதன்முறையாக தேர்தலை சந்திக்கும் த.வெ.க.,வும், நாம் தமிழர் கட்சியும் தனித்து களமிறங்கியது. இதனால் தேர்தலில் நான்குமுனை போட்டி நிலவியது.

மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 110 பேர், 135 வேட்பு மனுக்களை வழங்கினர். இதில், பிரதான கட்சி வேட்பாளர்கள் அளித்த கூடுதல் மனு, மாற்று வேட்பாளரின் மனு, படிவம் சரியாக நிரப்பாதது உட்பட பல்வேறு காரணங்களால் 55 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 80 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து, 8 வேட்பாளர்கள் தங்களது மனுவை வாபஸ் பெற்றனர். இறுதியில், அங்கீகரிக்கப்பட்ட மாநில, தேசிய கட்சிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சி சார்பில் 29 பேர், 43 சுயேச்சைகள் என மொத்தமாக 72 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருந்தனர். இதில், 8 பெண் வேட்பாளர்கள்.

இதுவரை நடந்த தேர்தல்களில் எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என எளிதாக கணிக்க முடிந்தது. ஆனால், இந்த முறை நடிகர் விஜய் துவங்கியுள்ள த.வெ.க., கட்சிக்கு முதல் முறை வாக்காளர்கள், பெண்கள், இளைஞர்களின் ஆதரவு அதிகமாக இருந்ததால் பிரதான கட்சி வேட்பாளர்கள் கலக்கமடைந்தனர். வேட்பாளர் அறிமுக கூட்டம், கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தேர்தல் பிரசாரம், கட்சி தலைவர்கள் மற்றும் பேச்சாளர்கள் வருகை என தி.மு.க., - அ.தி.மு.க.,வும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் பல்வேறு செலவுகளை செய்தனர்.

ஆனால், த.வெ.க., வேட்பாளர்கள் தங்களது கட்சி நிர்வாகிகளுக்குள் ஆலோசனை நடத்தி, பிரசாரத்தை மட்டுமே மேற்கொண்டனர். தொடர்ந்து, திராவிட கட்சிகளின் ஆயுதமாக உள்ள 'ப' விட்டமின்களும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது.

பரபரப்பான சூழலுக்கு மத்தியில் கடந்த மார்ச் 23ம் தேதி தேர்தல் நடந்தது. இதில், த.வெ.க., கணிசமான ஓட்டுகளை பெற்றிருக்குமோ என பிரதான கட்சி வேட்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு தொகுதியிலும் தோராயமாக த.வெ.க., விற்கு 30 முதல் 40 ஆயிரம் ஓட்டுகள் வரை கிடைக்கலாம் என பிரதான கட்சியினரே கூறி வருகின்றனர். இந்த ஓட்டு எந்த கட்சிக்கு சாதகத்தை ஏற்படுத்தும், எந்த கட்சிக்கு பாதகத்தை விளைவிக்கும் என்பது ஓட்டு எண்ணிக்கை முடிவில்தான் தெரியும். இதனால் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., மற்றும் வி.சி., வேட்பாளர்கள் தேர்தல் முடிந்தும் பதற்றமாகவே உள்ளனர்.

த.வெ.க., பெறும் ஓட்டுகள் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள இளைஞர்கள், பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்லுாரி மற்றும் பங்காரம் லட்சுமி கல்வியியல் கல்லுாரியில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் எந்த கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர், அடுத்த 5 ஆண்டுகள் தமிழகத்தை ஆளப்போவது எந்த கட்சி என்ற கேள்விக்கு இன்று மாலைக்குள் விடை கிடைக்கும். ஆனால், அதற்கு முன்பாக தற்போது வேட்பாளர்கள் திக்...திக்... மன நிலையில் உள்ளனர்.

-நமது நிருபர்-:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us