பேய் பிடித்ததாக ‘டார்ச்சர்’ சக மாணவிகள் மீது வழக்கு
பேய் பிடித்ததாக ‘டார்ச்சர்’ சக மாணவிகள் மீது வழக்கு
ADDED : செப் 14, 2026 09:14 PM
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே தனியார் பொறியியல் கல்லுாரியில் விடுதியில் தங்கி பயிலும் மாணவிக்கு பேய் பிடித்ததாக கூறி சக மாணவிகள் துன்புறுத்தியது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் விடுதியில் தங்கி படிக்கின்றனர்.
இதில், முதலாமாண்டு பயிலும் மாணவிக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி அவருடன் தங்கியுள்ள சக மாணவிகள் 4 பேர் துன்புறுத்தியுள்ளனர்.
பேய் பிடித்ததாக தெரிவித்த மாணவியின் கையில் கற்பூரம் ஏற்றி, தாக்கியதுடன் இது குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண் நடந்த சம்பவம் தொடர்பாக சின்னசேலம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், 4 மாணவிகள் மீதும் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
