UPDATED : அக் 06, 2026 11:37 PM
ADDED : அக் 06, 2026 06:06 PM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் மின்கம்பம் மாற்றும் பணியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
உளுந்துார்பேட்டையில் பஸ் நிலையம் அருகே முக்கிய சாலையான சென்னை சாலையில் டீ கடை எதிரே இருந்த பழுமையான மின் கம்பத்தை நேற்று காலை 11:00 மணியளவில் மின்வாரிய ஊழியர்கள் மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால், சென்னை சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மின் நிறுத்தம் செய்யப்பட்டு மின் கம்பம் மாற்றப்பட்டதால் வணிகர்கள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
மேலும், கிரேன் மூலம் மின் கம்பங்கள் மாற்றும் பணி நடந்ததால் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள், விருத்தாசலம் சாலையிலிருந்து பஸ் நிலைய நோக்கி செல்லும் வாகனங்கள், திருவெண்ணெய்நல்லுார் சாலையில் வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த போக்குவரத்து போலீசார் நேரில் சென்று, போக்குவரத்தை சீரமைத்தனர்.
