ADDED : மார் 28, 2026 06:23 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., பகுதியில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை மனைவி பிரியா, 38; இவர் கடந்த ஜன., மாதம் 6ம் தேதி எம்.ஆர்.என்., நகரில் உள்ள டியூசன் சென்டரில் படிக்கும் தனது மகளை அழைத்து வர ஸ்கூட்டரில் சென்றார். எம்.ஆர்.என்., மெயின்ரோட்டில் சென்ற போது, அவ்வழியாக பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பிரியாவின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்தனர். உடன், பிரியா கெட்டியாக பிடித்ததால் செயின் அறுபட்டது. இதில், மர்ம நபர்கள் தங்களது கையில் கிடைத்த 2.5 சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பினர்.
இச்சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், சேலம் மாவட்டம், காசநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சக்திவேல், 25; திருச்செங்கோடு அருகே வேலகவுண்டம்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார் மகன் மணிகண்டன், 30; ஆகியோர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. உடன், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
