/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு நிபந்தனை ஜாமின்
/
கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு நிபந்தனை ஜாமின்
ADDED : ஜன 22, 2025 07:16 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்களில் இரண்டு பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த ஜூன் 19ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 229 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதில், 68 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
வழக்கினை விசாரித்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்றவர்கள், சப்ளை செய்தவர்கள் என 24 பேரை கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். இதில், குண்டர் தடுப்பு சட்டத்தில் 18 பேர் கைது செய்யப்பட்டனர். கைதாகி சிறையில் இருந்தவர்களில், அரிமுத்து,65; என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமின் வழங்கப்பட்டது.
பின்னர், குண்டர் தடுப்பு சட்ட உத்தரவு உள்ளிட்ட ஆவணங்கள், அவர்களுக்கு தெரிந்த மொழிகளில் வழங்கப்படவில்லை என கூறி 18 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து சிறையில் இருப்பவர்கள் ஜாமின் கோரி மனு அளித்தனர். இந்த மனு மீதான விசாரணை, கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது.
வழக்கினை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம், சூ.பாலப்பட்டை சேர்ந்த கோதண்டம் மகன் கண்ணன்,40; வாணியந்தலை சேர்ந்த நடேசன் மகன் அய்யாசாமி,45; ஆகிய இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.