/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலூாில் பாதாள சாக்கடை திட்டம்... வருமா? மக்கள் பிரதிநிதிகளின் நடவடிக்கை தேவை
/
திருக்கோவிலூாில் பாதாள சாக்கடை திட்டம்... வருமா? மக்கள் பிரதிநிதிகளின் நடவடிக்கை தேவை
திருக்கோவிலூாில் பாதாள சாக்கடை திட்டம்... வருமா? மக்கள் பிரதிநிதிகளின் நடவடிக்கை தேவை
திருக்கோவிலூாில் பாதாள சாக்கடை திட்டம்... வருமா? மக்கள் பிரதிநிதிகளின் நடவடிக்கை தேவை
ADDED : பிப் 19, 2024 11:28 PM
திருக்கோவிலுார: திருக்கோவிலுார் நகராட்சியில் பெரும்பான்மையான இடங்களில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாத நிலையில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கோவிலுார் நகராட்சி வேகமாக வளர்ந்து வரும் நகரமாகும். நகரில் 27 வார்டுகளில் 45 ஆயிரம் வீடுகளும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும் வசிக்கின்றனர். விரைவில் நகராட்சியின் எல்லை விரிவுபடுத்தப்பட்டு சிறப்பு நிலை நகராட்சியாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் நகரத்தின் பரப்பளவு, மக்கள் தொகையின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
நகரின் வடக்கு பகுதியில் தென்பெண்ணை ஆறும், தெற்கு பகுதியில் பெரிய ஏரியும் உள்ளது. இதைத் தாண்டி சந்தைப்பேட்டை, திருக்கோவிலுாரின் முக்கிய பகுதியாக உள்ளது. இங்கு ஆர்.டி.ஓ., அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், தீயணைப்பு நிலையம், தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், கிளைச் சிறை, டி.எஸ்.பி., முகாம் அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை பயணியர் விடுதி, முக்கிய அரசு அதிகாரிகளுக்கான குடியிருப்பு பகுதிகளும் அமைந்திருக்கும் பகுதியாகும். இந்தப் பகுதி தற்போது, மேலும் விரிவடைந்து, திருக்கோவிலுாரின் புறவழிச்சாலை வரை பறந்து விரிந்துள்ளது.
அதேபோல் திருக்கோவிலுார் அஷ்டலட்சுமி நகர், என்.ஜி.ஜி.ஓ., நகர், அண்ணா நகர் என பெருகிவிட்டது. இவை அனைத்திற்கும் கழிவு நீர் கால்வாய் இருக்கிறதா என்பது மிகப்பெரும் கேள்விக்குறியாகும்.
சரியான கழிவுநீர் கால்வாய் இல்லாததால் காலி மனைகளிலும், பல இடங்களில் தெருக்களிலும் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதன்மூலம் கொசுத் தொல்லை அதிகரித்து தொற்றுநோய் பரவும் அபாயமும் எழுந்துள்ளது.
நகரின் விரிவாக்கப் பகுதிகளில் வீடு கட்டியிருப்பவர்கள் பெரும்பாலும் அரசு ஊழியர்கள், நடுத்தர வர்க்கத்தினர். இவர்கள் முறையாக நகராட்சியில் அனுமதி பெற்று வீடு கட்டியுள்ளனர்.
இதற்காக தெருவிளக்கு, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த நகராட்சி மூலம் கட்டணம் பெறப்பட்டிருக்கும் நிலையில், ஆண்டு தோறும் வீட்டு வரி உள்ளிட்ட வரிகளை முறையாக செலுத்தி வருகின்றனர்.
இது போன்ற பகுதிகளில் தான் கழிவுநீர் அதிகம் தேங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில இடங்களில் இருக்கும் கால்வாய்களும் ஒருங்கிணைக்கப்படாமல் கால்வாயிலேயே கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
பல இடங்களில் கழிவுநீர் தென்பெண்ணை ஆற்றிலும், ஏரியிலும் கலக்கும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் சித்தேரியன் வாய்க்கால், ஆவியூரான் வாய்க்கால்களும் பிரதான கழிவு நீர் கால்வாயாக மாறிப்போனது. இதனால் எஞ்சி இருக்கும் ஒரு சில ஏக்கர் பரப்பளவிலான விவசாய பணிகள் பாதிக்கப்படுகிறது.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட பேரூராட்சியாக இருந்த போதே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே திட்டம் தயாரிக்கபட்டு டெண்டர் விடும் தருவாயில் அரசியல் காரணங்களால் செயல்படுத்தப்பட முடியாமல் போனது. தற்போது, நகரம் பலமடங்கு விரிவடைந்து வளர்ச்சியளடைந்துள்ள நிலையில் பாதாள சாக்கடை திட்டம் அவசர அவசியமாகியுள்ளது. இதற்கு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் முழுமுயற்சி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

