/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உரிமம் பெறாதவர்கள் பட்டாசு வாங்கி பதுக்கல்: விபத்தை தடுக்க நடவடிக்கை தேவை
/
உரிமம் பெறாதவர்கள் பட்டாசு வாங்கி பதுக்கல்: விபத்தை தடுக்க நடவடிக்கை தேவை
உரிமம் பெறாதவர்கள் பட்டாசு வாங்கி பதுக்கல்: விபத்தை தடுக்க நடவடிக்கை தேவை
உரிமம் பெறாதவர்கள் பட்டாசு வாங்கி பதுக்கல்: விபத்தை தடுக்க நடவடிக்கை தேவை
ADDED : அக் 07, 2024 06:36 AM
தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி இப்போதே சில இடங்களில் பட்டாசு கடைகள் திறக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் முறையான உரிமம் பெறாமல் பாதுகாப்பின்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது.
பட்டாசு கடைகளை வைக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால், இவைகளை பெரும்பாலானோர் பின்பற்றுவதில்லை. அதிகாரிகளும் கண்டும் காணாமல் மெத்தனமாக இருந்து விடுகின்றனர்.
இதன் காரணமாக விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்பட காரணமாகி விடுகிறது. அதிலும், குறிப்பாக மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் அபாயகரமான வகையில் பட்டாசுகளை வாங்கி பதுக்கி வருகின்றனர்.
தீபாவளி நெருக்கத்தில் சிவகாசியிலிருந்து பட்டாசுகளை வரவழைப்பதற்கு பல்வேறு கெடுபிடிகள் இருக்கும் என்பதாலும், முன்கூட்டியே வாங்கினால் விலை குறைவாக இருக்கும் என்பதாலும் ஒரு மாதம் முன்னதாகவே அவைகளை வாங்கி இருப்பு வைக்க தொடங்கி விட்டனர். நகர்ப்புறங்களில் மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் உள்ள குடோனில் பட்டாசுகளை அதிகம் வாங்கி ஸ்டாக் வைத்துள்ளனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு அருகே ஸ்டேஷனரி கடை மேல் தளத்தில் அளவுக்கு அதிகமாக ஸ்டாக் வைக்கப்பட்ட 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சிதறியது.
இவ்விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றாலும் அருகில் உள்ள பள்ளி குழந்தைகள், பொதுமக்கள், வியாபாரிகள் அச்சமடைந்தனர்.
கடந்த 2021 ம் ஆண்டு சங்கராபுரம் நகரின் மையப் பகுதியில் மளிகைக் கடையை ஒட்டி வைத்திருந்த பட்டாசு கடை தீப்பிடித்து வெடித்து சிதறியதில் 7 பேர் இறந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கடந்த 2022 ம் ஆண்டு கள்ளக்குறிச்சி கா.மாமனந்தல் சாலையில் தனியார் பட்டாசு தயாரிக்கும் கட்டடத்தில் வெடி விபத்து ஏற்பட்டு ஒருவர் இறந்தார். இது போன்ற விபத்துகளுக்கு பாதுகாப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்காத அலட்சியமே முக்கிய காரணமாகும்.
உரிய உரிமம் பெறாதவர்களும் உரிமம் காலாவதியானவர்களும் பட்டாசு கடை வைப்பதை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. கிராமப் புறங்களில் சிறிய பெட்டிக்கடைகளில் கூட பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது.
சில இடங்களில் ஒரே உரிமம் பெற்று பல இடங்களில் கடை திறந்து பட்டாசு விற்பனை செய்கின்றனர். இது சீசன் விற்பனை என்பதால் அதிகாரிகளை 'கவனித்து' சரி கட்டி விட்டு அதிக லாபம் சம்பாதிக்கின்றனர்.
அதேபோல் குடியிருப்புப் பகுதியில் பட்டாசு குடோனில் ஸ்டாக் வைத்து அங்கிருந்து கடைகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். குடோனில் அழுத்தம் அதிகரித்து வெப்பநிலை உயரும் போது பட்டாசுகள் தானாகவே வெடித்து பெரும் விபத்து ஏற்பட காரணமாகி விடுகிறது.
ஒரு சிலரின் சுயநலத்துக்காக அப்பாவி உயிர்கள் பலியாவதைத் தடுக்கும் வகையில் பட்டாசு விற்பனை செய்வதில் உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.