UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 06:18 PM

கள்ளக்குறிச்சி: உலகங்காத்தான் பகுதியில் பயணிகள் நிழற்குடையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் புதர்கள் மண்டியுள்ளது.
சின்னசேலம் - கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் உலகங்காத்தான் பஸ் நிறுத்தத்தில், பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகள் பலர் பஸ்சுக்காக காத்திருந்து செல்கின்றனர்.
இதனையொட்டி கள்ளக்குறிச்சி மார்கத்தில் சாலையோரம் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. துவக்கத்தில் கிராம பொதுமக்கள் பலர் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், பயணிகள் நிழற்குடை சுற்றிலும் பராமரிப்பு இல்லாததால் புதர் மண்டியது. இதனால், பொதுமக்கள் சாலையிலேயே நின்று பஸ் ஏறிச் சென்றனர். இதனால் தற்போது பயணிகள் நிழற்குடை முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதனால், இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாகவும் மாறியுள்ளது. எனவே, பயணிகள் நிழற்குடையை சுற்றி சூழ்ந்துள்ள புதர்களை அகற்றி பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
