/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசுப்பள்ளி பெஞ்சில் மது அருந்தும் வீடியோ வைரல்
/
அரசுப்பள்ளி பெஞ்சில் மது அருந்தும் வீடியோ வைரல்
ADDED : ஏப் 18, 2025 05:08 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே, அரசு பள்ளிக்கு சொந்தமான பெஞ்சுகளில் மர்ம நபர்கள் மது அருந்தும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகிறது.
கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் அரசு ஆதிதிராவிட நடுநிலைப் பள்ளி யில் அப்பகுதியைச் சேர்ந்த 170 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
பள்ளியில் போதிய இடவசதியின்மையால், 20 பெஞ்சுகளை கிராம ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் வைத்துள்ளனர்.
இந்நிலையில் அந்த கட்டட வரண்டாவில் பாதுகாப்பற்ற முறையில் இருந்த பெஞ்சுகளில் அமர்ந்து, மர்ம நபர்கள் சிலர் பகல் மற்றும் இரவு நேரங்களில் மது அருந்தி வந்தனர்.
அந்த பெஞ்சுகளில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ மற்றும் காலி மதுபாட்டில், வாட்டர் பாட்டில், கிளாஸ் போன்றவை இருக்கும் வீடியோ, வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாகிறது.
இதனையடுத்து கல்வி துறை அதிகாரிகள், தென்கீரனுார் அரசு பள்ளி தலைமையாசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு அது தொடர்பான விளக்கம் கேட்டுள்ளனர்.
தொடர்ந்து, கிராம சேவை மைய கட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த பள்ளிக்கு சொந்தமான இருக்கைகளை பள்ளிக்கு எடுத்து வருவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.