ADDED : மே 01, 2026 03:37 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டு எண்ணும் பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சட்டசபை தேர்தலில் பதிவான ஒட்டுகள் எண்ணும் பணி வரும் மே 4ம் தேதி நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், ஓட்டு எண்ணிக்கைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களில் பணியில் இணைய வேண்டும். அத்துடன் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் விதிகளை மிக விழிப்புடன் பின்பற்ற வேண்டும்.
ஓட்டு எண்ணும் ஒவ்வொரு மேஜையிலும் ஒரு நுண் பார்வையாளர் நியமிக்கப்படுவர். ஒவ்வொரு சுற்று முடிவிலும் கட்டுப்பாட்டு இயந்திரத்தின் எண் மற்றும் வேட்பாளர் பெற்ற ஓட்டுக்களை அதற்கான படிவத்தில் துல்லியமாக பதிவிட்டு, தேர்தல் பார்வையாளரிடம் வழங்க வேண்டும். தபால் ஓட்டுக்கள் எண்ணும் மேஜையில் ஒரு கூடுதல் நுண் பார்வையாளர் நியமிக்கப்படுவர். முழு நடைமுறைகளும் வீடியோ பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
