/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கழிவுநீர் ஓடையாக மாறிய நீர்நிலைகள் கள்ளக்குறிச்சியில் சுகாதார சீர்கேடு
/
கழிவுநீர் ஓடையாக மாறிய நீர்நிலைகள் கள்ளக்குறிச்சியில் சுகாதார சீர்கேடு
கழிவுநீர் ஓடையாக மாறிய நீர்நிலைகள் கள்ளக்குறிச்சியில் சுகாதார சீர்கேடு
கழிவுநீர் ஓடையாக மாறிய நீர்நிலைகள் கள்ளக்குறிச்சியில் சுகாதார சீர்கேடு
ADDED : செப் 04, 2025 01:19 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ஆறு, ஏரி போன்ற நீர் நிலைகள் கழிவு நீர் ஓடையாக மாறி வருவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி நகராட்சியின் 21 வார்டுகளில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மாவட்ட தலைநகராக தரம் உயர்த்தப்பட்டதால், நகர பகுதி நாளுக்கு நாள் விரிவாக்கம் அடைந்து வருகிறது. ஓட்டல்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
ஆனால், குடியிருப்புகள், வணிக வளாகம், கடைகளில் இருந்து வரும் கழிவுநீர் சரியான முறையில் வெளியேற்ற போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. கழிவுநீர் வாய்க்கால்களில் குப்பைகள் குவிந்து, அடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. 15 நிமிடம் மழை பெய்தால் கூட, வாய்க்காலில் தேங்கி நிற்கும் கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது.
அதுபோல் சரியான கட்டமைப்பு இல்லாததால் குடியிருப்புகளுக்கு இடையே ஆங்காங்கே குட்டை போல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், கொசு உற்பத்தி அதிகரிப்பதுடன், துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
தியாகதுருகம் சாலையோர கால்வாயில் செல்லும் கழிவுநீர் கோமுகி ஆற்றில் கலக்கிறது. இதனால் ஆறு கழிவுநீர் ஓடையாக மாறிவிட்டது. இதேபோல், வ.உ.சி., நகர், ராஜா நகர், எம்.ஜி.ஆர்., நகர், கேசவலு நகர் உள்ளிட்ட பகுதி குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் சித்தேரியில் திறந்து விடப்படுகிறது.
ஆற்றை ஓட்டியுள்ள கிராமங்களில் ஆற்றில் போர்வெல் அமைத்து குடிநீர் எடுத்து பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், ஆற்று நீருடன் கழிவுநீர் கலப்பதால் பொதுமக்களுக்கு பல்வேறு சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, ஆறு, ஏரி உள்ளிட்டவையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். வீடுகள், வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாதுகாப்பாக வெளியேற்ற மாற்றுத்திட்டத்தை மாவட்ட நிர்வாகம் உருவாக்க வேண்டும்.