/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் 21 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கம்
/
சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் 21 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கம்
சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் 21 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கம்
சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் 21 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கம்
ADDED : நவ 07, 2025 11:12 PM

கள்ளக்குறிச்சி: சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் 21 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியில் 36 அடி உயரம் (736.96 மில்லியன் கன அடி கொள்ளளவு) கொண்ட மணிமுக்தா அணை உள்ளது. கல்வராயன்மலை பகுதியில் பெய்யும் மழை மணி மற்றும் முக்தா ஆறுகள் வழியாக அணைக்கு வருகிறது. இது தவிர, மூரார்பாளையம் பாப்பாங்கால் ஓடையும் அணைக்கு நீர்வரத்தாக உள்ளது. மழைக்காலங்களில் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, விவசாய பாசனத்திற்காக மதகு வழியாக திறந்து விடப்படுவது வழக்கம்.
இதன் மூலம் புதிய மற்றும் பழைய பாசனத்தை சேர்ந்த 5,493 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பயன்பெறும். கனமழையின் போது அதிகளவு நீர்வரத்து ஏற்படும் பட்சத்தில், அணையில் 34 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உபரி நீர் புதிய மற்றும் பழைய ஷட்டர்கள் வழியாக மணிமுக்தா ஆற்றில் திறந்து விடப்படும். இதன் மூலம் ஆற்றில் உள்ள தடுப்பணைகள் நிரம்பும். ஆற்றில் உள்ள பக்கவாட்டு கால்வாய்கள் மூலம் அருகில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும்.
இதில், பழைய ஷட்டர்கள் வலுவிழந்ததால், தண்ணீர் தாங்கும் திறன் முற்றிலுமாக குறைந்தது. கடந்த ஆண்டு 30 அடி உயரத்திற்கு மேல் தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. எனவே, ரூ.20.76 கோடி நிதியில் ஷட்டர்களை புதுப்பிக்கும் பணி கடந்த செப்., மாதம் துவங்கியது.
இதனால், அணையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் மழை பெய்தும் அணைக்கு நீர் வரத்து ஏற்பட்ட நிலையில், தண்ணீர் முழுதும் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதற்கு விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு நிலவியதால், ஷட்டர் புதுப்பிக்கும் பணிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டன.
தொடர்ந்து கடந்த அக்., 27ம் தேதி மாலை முதல் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது அணையில் 21 அடி உயரத்திற்கு (73 மில்லியன் கன அடி) தண்ணீர் மட்டம் உள்ளது.
பழைய ஷட்டர்கள் வலுவிழந்த நிலையில் இருப்பதால் அணைக்கு வரும் தண்ணீரின் இருப்பினை நீர்வளத்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

