/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் ஏரிக்கு நீர் வரத்து துவங்கியது
/
திருக்கோவிலுார் ஏரிக்கு நீர் வரத்து துவங்கியது
ADDED : நவ 03, 2024 11:28 PM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பெரிய ஏரி நீர்வரத்து, ஆற்று வாய்க்கால் துார்வாரப்பட்டதால் ஏரிக்கு நீர் வரத்து துவங்கியுள்ளது.
திருக்கோவிலுார் பெரிய ஏரி 95 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மூலம் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. மேலும், ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீர் மூலம் கச்சிக்குச்சான், ஆவிகொளப்பாக்கம், காட்டுப்பையூர் என 7க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பும்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரிக்கான நீர்வரத்து முடியனுார் தென்பெண்ணை ஆற்றில் இருந்து துவங்குகிறது. 7 கி.மீ., துாரமுள்ள இந்த வாய்க்கால் 2 ஆண்டுகளுக்கு முன் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது மணல் நிரம்பி துார்ந்து போனது. இதனால் ஏரிக்கான நீர்வரத்து முற்றிலுமாக தடைபட்டிருந்தது.
இது பற்றிய செய்தி 'தினமலர்'நாளிதழில் வெளியானது. அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் பொதுப்பணித்துறை சார்பில், பண்ணாரியம்மன் சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் இணைந்து, 10 நாட்களுக்கும் மேலாக 7 கி.மீ., துாரமுள்ள வாய்க்கால் முழுதுமாக துார் வாரி சீரமைக்கப்பட்டது.
இதன் பயனாக தற்போது, தென்பெண்ணையாற்றில் தண்ணீர் சென்று கொண்டிருக்கும் நிலையில், திருக்கோவிலுார் ஏரிக்கான நீர்வரத்து துவங்கியுள்ளது. எனவே, இந்த ஆண்டு ஏரி நிரம்புவதுடன், இதிலிருந்து வெளியேறும் உபரி நீர் மூலம் மேலும் பல ஏரிகள் நிரம்பி விவசாயம் செழிக்கும் சூழல் உருவாகியுள்ளது.