/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உளுந்துார்பேட்டையில் புறவழிச்சாலை பணி துவங்குவது எப்போது? போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை தேவை
/
உளுந்துார்பேட்டையில் புறவழிச்சாலை பணி துவங்குவது எப்போது? போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை தேவை
உளுந்துார்பேட்டையில் புறவழிச்சாலை பணி துவங்குவது எப்போது? போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை தேவை
உளுந்துார்பேட்டையில் புறவழிச்சாலை பணி துவங்குவது எப்போது? போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை தேவை
ADDED : பிப் 18, 2025 06:12 AM

சென்னை, திருச்சி, மதுரை, நெய்வேலி, விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு உளுந்துார்பேட்டை வழியாக வாகனங்கள் செல்கிறது. போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், அதற்கேற்ப சாலை வசதிகள் இல்லை.
குறிப்பாக, உளுந்துார்பேட்டையில் திருச்சி சாலை சந்திப்பு முதல் விருத்தாசலம் சாலை சந்திப்பு வரையும், திருவெண்ணைநல்லுார் சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தால் சாலை குறுகி போக்கு வரத்து பாதிப்பு தொடர் கதையாக உள்ளது.
போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த உளுந்துார்பேட்டை பஸ் நிலைய பகுதிகளில் இருந்து விருத்தாசலம் சாலை சந்திப்பு வரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது. பின், சாலை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத் துறையினர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அளவீடு செய்தனர்.
மேலும், அன்னை சத்யா தெரு பகுதி வழியாக (அண்ணா சிலை அருகில்) பஸ் நிலையத்திற்கு வாகனங்கள் செல்வதற்கான சாத்தியக் கூறுகளையும் ஆய்வு செய்தனர். இதற்கிடையே ஆக்கிரமிப்பாளர்கள் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து, கடையை இடிக்கக் கூடாது என, தடை உத்தரவு பெற்றனர்.
இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றுவதையும், சாலை விரிவாக்க பணியும் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதற்கிடையே, உளுந்துார்பேட்டையில் இருந்து சேலம் செல்லும் சாலையில் எம்.எஸ்., தக்கா பகுதியில் இருந்து திருவெண்ணைநல்லுார் சாலையை இணைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதற்காக கடந்த 10 மாதங்களுக்கு முன் அளவீடு பணி மேற்கொண்டனர். பின், சேலம் சாலையில் இருந்து திருவெண்ணெய்நல்லுார் சாலைக்கு புறவழிச்சாலை அமைக்க நிலங்கள் கையகப்படுத்த 5 கோடி ரூபாயும், 2.50 கி.மீ., தொலைவு சாலை அமைக்க 14 கோடி ரூபாய் மதிப்பிலும் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைத்தனர்.
பல மாதங்களாகியும் புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் துவங்காததால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நடக்கின்றன. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச் சாலை பணிகளை உடனடியாக துவங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.