/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலையில் மீண்டும் படகு சவாரி துவங்குவது எப்போது? மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
/
கல்வராயன்மலையில் மீண்டும் படகு சவாரி துவங்குவது எப்போது? மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
கல்வராயன்மலையில் மீண்டும் படகு சவாரி துவங்குவது எப்போது? மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
கல்வராயன்மலையில் மீண்டும் படகு சவாரி துவங்குவது எப்போது? மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
UPDATED : மே 26, 2025 07:37 AM
ADDED : மே 26, 2025 01:02 AM

கல்வராயன்மலை கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ளது. திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களின் எல்லை பகுதியாக அமைந்துள்ளது. மொத்தம், 2700 முதல் 4 ஆயிரம் அடி வரை உயரம் கொண்டது.
இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலையில் பெரியார், கவியம், மேகம், சிறுகாலுார், எட்டியாறு உள்ளிட்ட பல்வேறு நீர் வீழ்ச்சிகள், அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளன.
மேலும் கரியாலுார் சிறுவர் பூங்கா, மூங்கில் குடில்கள் உள்ளிட்டவை பார்வையாளர்களை வசீகரித்து வருகின்றன.
இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர்.கல்வராயன் மலைக்கு வருபவர்களின், முக்கிய தேர்வாக பெரியார் நீர் வீழ்ச்சி மற்றும் படகுத்துறை உள்ளது.
படகு சவாரி நிறுத்தம்
கரியாலுார் அருகே உள்ள படகுத்துறையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வனத்துறை சார்பில், 10 படகுகள் விடப்பட்டன. கல்வராயன் மலைக்கு வருபவர்கள், படகு சவாரி செய்வதில், அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், காட்டாற்று வெள்ளத்தில், 6 படகுகள் அடித்து செல்லப்பட்டன. இதர, 4 படகுகளும் பழுதான நிலையில் புதிய படகுகள் எதுவும் வாங்கப்படவில்லை. இதனால் அங்கு ஓராண்டிற்கு மேலாக, படகு சவாரி நடைபெறவில்லை.
நீர் வரத்து அதிகரிப்பு
கோடைக்காலம் துவங்கிய நிலையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாத துவக்கத்தில் கல்வராயன் மலையில் உள்ள நீர் வீழ்ச்சிகள் மற்றும் படகு துறை தண்ணீர் வற்றி காணப்பட்டன. கடந்த சில தினங்களாக பெய்த கோடை மழை காரணமாக அருவிகளில் நீர் வர துவங்கி உள்ளது. அதுமட்டுமின்றி படகு துறையிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்துள்ளது.
ஆனால் படகு சவாரி இல்லாததால், இங்கு வரும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கல்வராயன் மலையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந் நிலையில், இங்கு படகு சவாரி ஓராண்டிற்கும் மேலாக, இல்லாமல் இருப்பது, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம், விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.