கலெக்டர் அலுவலகம் முழு பயன்பாட்டிற்கு வருவது எப்பொழுது? ... மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட கோரிக்கை
கலெக்டர் அலுவலகம் முழு பயன்பாட்டிற்கு வருவது எப்பொழுது? ... மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட கோரிக்கை
ADDED : பிப் 20, 2026 04:58 AM

நமது நிருபர்: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் விரைவில் முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி புதிய கலெக்டர் அலுவலகம் 139.41 கோடி ரூபாய் மதிப்பில் வீரசோழபுரத்தில் 35.18 ஏக்கர் பரப்பில் 8 தளங்களுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
இதனை கடந்த டிச., 27 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திறப்பு விழாவின் போது பத்திரிகையாளர்கள் யாரையும் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
கட்டடத்தின் வெளிப்புற பணிகள் மட்டுமே முடிந்த நிலையில் உட்கட்டமைப்பில் வேலைகள் இன்னும் முடியாமல் உள்ளதாக கூறப்பட்டது.
திறப்பு விழாவை தொடர்ந்து ஒவ்வொரு தளத்திலும் உள்ள பல்வேறு துறை சார்ந்த அலுவலகத்தில் கோப்புகள் வைக்கும் ரேக்குகள் மற்றும் மர சாமான் வேலைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
அதேபோல் கட்டடத்தின் சுற்றுப்புறத்தை அழகுப்படுத்தும் பணிகளும் நடக்கிறது.
இதனால் கலெக்டர் அலுவலகத்தை முழுமையான பயன்பாட்டுக்கு இன்னும் கொண்டு வர முடியாத நிலை உள்ளது.
இருப்பினும் வருவாய் துறை சார்ந்த அலுவலகம் மற்றும் தற்போது அங்கு மாற்றப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி புறவழி சாலையில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளதால் தற்போது இயங்கி வரும் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல வெளியூரில் இருந்து வரும் மக்கள் டவுன் பஸ் மூலம் பழைய பஸ் நிலையம் சென்று மிகுந்த சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
புதிய கலெக்டர் அலுவலகம் திறக்கப்பட்டு ஒன்றரை மாதங்கள் ஆகியும் இன்னும் இது முழு பயன்பாட்டுக்கு வராததால் பல்வேறு தேவைகளுக்காக அங்கு செல்லும் பொதுமக்களும் பணிபுரிய ஊழியர்களும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
அதேபோல் சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால் வேட்பு மனு தாக்கல் புதிய கலெக்டர் அலுவலகத்தில் செய்வதற்கு வசதியாக விரைவில் அனைத்து துறை சார்ந்த அலுவலகப் பணிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அரசியல் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
இதனால் வேட்பு மனு தாக்கலின் போது தொண்டர்களுடன் அரசியல் கட்சியினர் கள்ளக்குறிச்சி நகரில் ஊர்வலமாக செல்வது தவிர்க்கப்பட்டு போக்குவரத்து சிக்கல் ஏற்படுவது முற்றிலும் தவிர்க்கப்படும்.மேற்கண்டஅனைத்து சிக்கலுக்கும் தீர்வாக புதிய கலெக்டர் அலுவலகத்தை விரைவில் முழு பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
