/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணி முடிவது எப்போது? திருக்கோவிலுாரில் பொதுமக்கள் எதிர்பார்ப்பு
/
அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணி முடிவது எப்போது? திருக்கோவிலுாரில் பொதுமக்கள் எதிர்பார்ப்பு
அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணி முடிவது எப்போது? திருக்கோவிலுாரில் பொதுமக்கள் எதிர்பார்ப்பு
அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணி முடிவது எப்போது? திருக்கோவிலுாரில் பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 21, 2025 10:33 PM

திருக்கோவிலுார் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும் நோக்கில் 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 6 தளங்களுடன், 2 பிளாக்குகளாக மருத்துவமனை அமைக்க கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் டெண்டர் விடப்பட்டது. 18 மாதங்களில் பணி முடித்தாக வேண்டும். அதன்படி கடந்த டிசம்பர் மாதம் பணி நிறைவடைந்திருக்க வேண்டும்.
ஒப்பந்த காலம் நிறைவடைந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில் 70 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. இன்னும் 30 சதவீத பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது.
புதிய கட்டடம் கட்டுவதற்காக பழைய கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டது. இதன் காரணமாக இட நெருக்கடி ஏற்பட்டு புறநோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான இடவசதி இல்லை.
இதன் காரணமாக சாதாரண காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்னைகளைத் தவிர்த்து மற்ற அனைத்து வியாதிகளுக்கும் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கும் முகாமாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
புறநோயாளிகள் சீட்டு வாங்குவதற்கும், மருத்துவரை அணுகுவதற்கும், மாத்திரைகள் வாங்கவும் மணி கணக்கில் காத்துக் கிடக்கும் அவலம் உள்ளது.
இது ஒரு புறம் இருக்க திருக்கோவிலுார் சுற்று வட்டார பகுதிகளில் விபத்து உள்ளிட்ட காரணங்களால் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுபவர்கள் முதலுதவி சிகிச்சைக்குபின் மேல் சிகிச்சை பரிந்துரைக்க படும்போது அவர்களுக்கான தீவிர சிகிச்சையில் ஏற்படும் காலதாமதம் உயிரிழப்பு வரை செல்கிறது.
அகால மரணங்களால் உயிரிழப்பவர்களின் உடல்கள் பிண கூறாய்வு செய்ய போதுமான வசதி இல்லாததால் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதால், இறந்தவர்களின் உறவினர்கள் அலைகழிக்கப்படும் அவலமும் சொல்லி மாளாது.
திருக்கோவிலுார் சுற்றி இருக்கும் 100க்கும் மேற்பட்ட கிராம மக்களின் உயிர் காக்கும் ஒரே மருத்துவமனையாக இருக்கும் சூழலில், கட்டுமானப் பணியை விரைந்து முடித்து, நோயாளிகளின் இன்னல்களைப் போக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.