/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தலைமை மருத்துவமனை கட்டுமான பணி முடிவது எப்போது? உரிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதி
/
தலைமை மருத்துவமனை கட்டுமான பணி முடிவது எப்போது? உரிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதி
தலைமை மருத்துவமனை கட்டுமான பணி முடிவது எப்போது? உரிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதி
தலைமை மருத்துவமனை கட்டுமான பணி முடிவது எப்போது? உரிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதி
ADDED : செப் 05, 2025 07:40 AM

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டுமான பணி ஒப்பந்த காலம் முடிந்து 8 மாதங்கள் கடந்த பின்பும் பணி நிறைவடையாததால் நோயாளிகள் தவித்து வருகின்றனர். திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு ஒரே சிகிச்சை மையமாக உள்ளது. இதனை உணர்ந்த அரசு, மாவட்ட தலைமை மருத்துவமனையாக அறிவித்தது.
அதற்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும் வகையில் 54 கோடி ரூபாய் மதிப்பில், 6 தளங்களுடன், இரண்டு பிளாக்குகளாக மருத்துவமனை கட்ட திட்டம் வகுக்கப்பட்டு, கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் டெண்டர் விடப்பட்டது.
ஒப்பந்ததாரர் பணியை காலம் கடத்தி துவங்கிய நிலையில், 18 மாதங்களில் பணி முடிக்க திட்டமிடப்பட்டு துவங்கியது.
கடந்த டிசம்பர் மாதம் பணி நிறைவடைந்திருக்க வேண்டும். ஒப்பந்த காலம் நிறைவடைந்து 8 மாதங்கள் கடந்த நிலையில் நிறைவு பணிகள் நடக்கிறது. இன்னும் பிளம்பிங், ஒயரிங், பால்சீலிங் என 20 சதவீத பணிகள் உள்ளது.
கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி அப்போதைய மாவட்ட கண்காணிப்பு அலுவலரான மதுசூதன் ரெட்டி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது நிருபர்களிடம் கூறுகயில், 'கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டது இதர பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளது. இதனை 3 மாதத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்' என கூறியிருந்தார்.
அவர் தெரிவித்து இரண்டரை மாதங்களைக் கடந்து விட்ட நிலையில் பணியில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏதும் இல்லை. இதேபோல் கடந்த மாதம் 14ம் தேதி மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் உயர் கல்வித்துறை அரசு செயலாளர் சங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
கடந்த ஜூலை 17ம் தேதி தொகுதி எம்.எல்.ஏ., பொன்முடி கட்டுமானப் பணியை பார்வையிட்டு, இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறினார்.
இப்படி அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் பணிகளை பலமுறை பார்வையிட்டும், ஒப்பந்த காலம் நிறைவடைந்து 8 மாதங்களைக் கடந்தும் முன் பகுதியில் மட்டும் பெயிண்ட் அடித்து பளபளப்பாக காட்சி அளிக்கிறது. உள்பகுதியில் வேலைகள் ஆமை வேகத்தில் தொடர்வதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதிய கட்டடம் கட்டுவதற்காக பழைய கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டது. இதன் காரணமாக இட நெருக்கடி ஏற்பட்டு புறநோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் உள் நோயாளிகளுக்கு பெட் வசதி, டாக்டர்களுக்கான பார்வையாளர் அறை என எதுவுமே இல்லை. இருக்கும் ஒரு கட்டிடத்தில் புறநோயாளிகள் சிகிச்சை, மேல் தளத்தில் பிரசவ வார்டு, இரண்டாவது தளத்தில் ஆபரேஷன் தியேட்டர் என எப்பொழுது பார்த்தாலும் கட்டடம் முழுவதும் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். இதன் காரணமாக டாக்டர்களும் சரியான நேரத்தில் பணிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து திருவண்ணாமலை, முண்டியம்பாக்கம் என மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கும் மையமாக மட்டுமே தற்பொழுது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தலைவலி, காய்ச்சலுக்கு மட்டுமே மருந்து மாத்திரை என்ற நிலையில் திருக்கோவிலூர் சுற்றி இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களின் உயிர் காக்கும் ஒரே மையமாக இது இருப்பதால் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு கட்டுமான பணியை விரைவுபடுத்தி மருத்துவமனையை செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் ஏழை, எளிய மக்கள்.