/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுாரில் உயர்மட்ட பாலம் கட்டுவது எப்போது? அமைச்சரின் உறுதிமொழி நிறைவேற்றப்படுமா
/
திருக்கோவிலுாரில் உயர்மட்ட பாலம் கட்டுவது எப்போது? அமைச்சரின் உறுதிமொழி நிறைவேற்றப்படுமா
திருக்கோவிலுாரில் உயர்மட்ட பாலம் கட்டுவது எப்போது? அமைச்சரின் உறுதிமொழி நிறைவேற்றப்படுமா
திருக்கோவிலுாரில் உயர்மட்ட பாலம் கட்டுவது எப்போது? அமைச்சரின் உறுதிமொழி நிறைவேற்றப்படுமா
ADDED : செப் 06, 2024 12:13 AM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் தரைப்பாலத்திற்கு மாற்றாக உயர் மட்ட பாலம் அமைக்கப்படும் என்ற அமைச்சர் பொன்முடியின் வாக்குறுதி நிறைவேற்றப்படாத சூழலில்,திட்டம் கைவிடப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மணம்பூண்டியையும் - திருக்கோவிலுாரையும் இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே காமராஜரால் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் வலுவிழுந்துள்ளது. சமீபத்தில் இப்பாலம் வலுவூட்டப்பட்டாலும், அதிகரித்துவரும் போக்குவரத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் பாலம் இல்லை. மாற்றாக அரகண்டநல்லுார் - திருக்கோவிலுாரை இணைக்கும் தரைபாலத்தின் அருகில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
இதற்குக் காரணம், தரைப்பாலம் முற்றிலுமாக பழுதடைந்து விட்டதால், அவ்வழியாக அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கு சென்ற வாகனங்கள் தற்பொழுது வலுவூட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தின் வழியாகவே செல்ல வேண்டி உள்ளது. இதன் காரணமாக ௫ கி.மீ., சுற்றி பயணிக்கும் சூழல், விவசாய விளைபொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தனது ஆயுட்காலத்தை கடந்தும் அதிகரித்துவிட்ட போக்குவரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் உயர்மட்ட பாலத்தில் நிலைமை பரிதாபகரமாகியுள்ளது.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அப்போதைய முதல்வர் பழனிசாமி உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என சட்டசபையில் வாக்குறுதி அளித்து, அதற்கான வரைவு திட்டம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு, டெண்டர் விட தயாரான சூழலில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.
ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசின் அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏ., வுமான பொன்முடியும் விரைவில் உயர்மட்ட பாலம் கட்டபப்படும் என்ற வாக்குறுதியை பல்வேறு கூட்டங்களில் அளித்து வந்தார். ஆட்சி பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் அதற்கான முன்னெடுப்புகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.
ஏற்கனவே போடப்பட்ட திட்ட வரையறையை மூன்று முறைக்கு மேல் மாற்றி பல லட்சங்களை செலவு செய்திருக்கும் நெடுஞ்சாலைத்துறை, மறுத்திட்ட வரையறை என்ற பெயரில் இதற்காக ஒரே நிறுவனத்திடம் பலமுறை பணம் வழங்கியதில் சந்தேகத்தை எழுப்புகின்றனர் விவரம் அறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்.
நிலைமை இப்படி இருக்க திட்டம் தற்பொழுது கைவிடப்பட்டதாக நெடுஞ்சாலை துறை வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
ரோடே இல்லாத கூவனுார்-சாங்கியம் கிராமத்திற்கெல்லாம் புதிதாக இணைப்பு சாலையை ஏற்படுத்தி தேவையில்லாமல் பாலங்களைக் கட்டி பொதுமக்களின் வசதிக்காக திட்டங்களை நிறைவேற்றுவதாக மார்தட்டிக் கொள்ளும் நெடுஞ்சாலைத்துறை, திருக்கோவிலுார் - அரகண்டநல்லுார் உயர்மட்ட பாலம் கட்டும் திட்டத்தில் மெத்தனம் காட்டுவது அ.தி.மு.க., அரசு கொண்டு வந்த திட்டம் என்ற வெறுப்பு அரசியலா? அல்லது துறை சார்ந்த அமைச்சர்களின் போட்டி அரசியலா? என்ற பேச்சு பரவலாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
எது எப்படியோ மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றாத அரசியல்வாதிகள் தேர்தலின் போது மக்களை சந்திக்கிக்க சென்றால் தகுந்த பாடங்களை கற்பிப்பார்கள் என்பது மட்டும் நிதர்சன உண்மை.