/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தெப்பகுளம் சீரமைப்பு பணி முடிவது எப்போது? திருக்கோவிலுார் மக்கள் எதிர்பார்ப்பு
/
தெப்பகுளம் சீரமைப்பு பணி முடிவது எப்போது? திருக்கோவிலுார் மக்கள் எதிர்பார்ப்பு
தெப்பகுளம் சீரமைப்பு பணி முடிவது எப்போது? திருக்கோவிலுார் மக்கள் எதிர்பார்ப்பு
தெப்பகுளம் சீரமைப்பு பணி முடிவது எப்போது? திருக்கோவிலுார் மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 06, 2025 06:45 AM

திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா நிறைவு நாளில் மூன்று நாட்கள் சுவாமி தெப்பத்தில் உலா வருவது வழக்கம். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வரை இது நடந்து வந்தது. குளத்திற்கு, பெரிய ஏரியில் இருந்து தண்ணீர் வரும் வகையில் பாதாள கால்வாய் இருந்தது. இது அடைபட்டதுடன், குளமும் பாழடைந்தது. இதனால் தெப்பல் உற்சவம் நிறுத்தப்பட்டது.
எனவே, பழுதடைந்த பாதாள கால்வாயை சீரமைத்து தெப்பகுளத்தை புனரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா புராதான நகர மேம்பாட்டுத் திட்டத்தில் குளம் சீரமைப்பு பணியை அறிவித்தார்.ஆனால் குளத்தை சீரமைக்கின்றோம் என்ற பெயரில் அதில் இருந்த மண்ணை கொள்ளை அடித்து விட்டு பாதியிலேயே பணியை நிறுத்தி விட்டனர்.
அதன்பிறகு 3 ஆண்டுகளுக்கு முன் இந்து சமய அறநிலையத்துறை, குளம் சீரமைப்பு பணிக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணி துவங்கியது.
ஆமை வேகத்தில் நடந்து வரும் நிலையில், குளத்தைச் சுற்றி மதில் சுவர் கட்டும் பணி மட்டுமே நிறைவடைந்துள்ளது. தற்போது, குளத்தின் மத்தியில் நீராழி மண்டபம் கட்டும் பணிக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது.
ஏரியிலிருந்து குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு மாற்று வழியாக புதிதாக குழாய் பதித்து பம்பிங் செய்து தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்காக குழாய் பதிக்கும் பணி பாதியளவில் நிற்கிறது. இத்திட்டத்தை வகுத்த பொறியாளர்களுக்கே இது வெற்றி பெறுமா என்ற சந்தேகம் எழுந்திருப்பது தான் பணி தடைபட்டிருப்பதற்கு காரணம் என்கின்றனர்.
குளத்தின் மேற்கு பகுதியில் கழிவு நீர் கால்வாய் உள்ளது. இது பழுதடைந்து கழிவுநீர் முழுதும் குளத்திற்குள் பாய்ந்து வருகிறது. முதல் கட்டமாக இந்த கழிவு நீர் கால்வாயை முழுமையாக சீரமைத்து, குளத்திற்குள் கழிவு நீர் வளராத வகையில் ஸ்திரமாக சீரமைக்க வேண்டும்.
அத்துடன் புராதானமான பழைய பாதாள கால்வாயை சீரமைத்து அதன் வழியாகவே தண்ணீரை குளத்திற்கு கொண்டுவர வேண்டும். பக்தர்களின் இந்த கோரிக்கைக்கு இந்து சமய அறநிலையத்துறை மதிப்பளித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த பக்தர்களின் கோரிக்கை.
மாவட்ட அதிகாரிகள் யாரும் இதுவரை குளத்தை பார்வையிட்டு சீரமைப்பு பணியை துரிதப்படுத்தாத நிலையில், தொகுதி எம்.எல்.ஏ., வும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி நேரில் ஆய்வு செய்து, பக்தர்களின் எண்ணத்திற்கு ஏற்ப சீரமைப்பு பணியை மாற்றி அமைத்து துரிதமாக பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.