/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் 'ரிங் ரோடு' திட்டம் எப்போது? விரைவுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
/
கள்ளக்குறிச்சியில் 'ரிங் ரோடு' திட்டம் எப்போது? விரைவுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
கள்ளக்குறிச்சியில் 'ரிங் ரோடு' திட்டம் எப்போது? விரைவுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
கள்ளக்குறிச்சியில் 'ரிங் ரோடு' திட்டம் எப்போது? விரைவுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
ADDED : நவ 20, 2025 05:24 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி 'ரிங் ரோடு' திட்ட பணிகளை விரைவுப்படுத்த அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் நகரை கடந்து செல்லும்போது, நகரம் ஸ்தம்பித்து விடுகிறது.
சிறுவங்கூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, ஏராளமான அரசு அலுவலகங்கள் கள்ளக்குறிச்சியில் செயல்படுவதால், மக்களின் வருகை அதிகரித்து வருகிறது.
கரும்பு அரவை பருவங்களில் டிராக்டர், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் நகரை கடந்து கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் ஏற்றிச் செல்லும் போதும் போக்குவரத்து பாதிப்பு உச்சக்கட்டத்திற்கு செல்கிறது.
விபத்து உள்ளிட்டவற்றில் சிக்கி அவசர சிகிச்சை தேவைப்படுவோர்களை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ்கள் அடிக்கடி வாகன நெரிசலில் சிக்கி தவிக்கிறது. தொடரும் டிராபிக் பிரச்னையால், சிறுவங்கூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு செல்வதற்கு பொதுமக்கள், நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மாவட்டத்தின் தலைநகரமான கள்ளக்குறிச்சியில், வாகன பெருக்கத்திற்கேற்ப விசாலமான சாலை வசதிகள் இல்லை. போக்குவரத்திற்கு நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், கள்ளக்குறிச்சி சுற்றி செல்லும் 'ரிங் ரோடு' அமைக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ரிங் ரோடு திட்டத்திற்கு முதற்கட்டமாக நில எடுப்பு பணிகளுக்கு ரூ.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் மூலம் 17 கி.மீ., சுற்றுளவில் 'ரிங் ரோடு' அமைப்பது தொடர்பாக நிலம் அளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதில் தியாகதுருகம் சாலையில் வீரசோழபுரம் பகுதியில் துவங்கி பெருவங்கூர், தண்டலை, சிறுவங்கூர் அரசு மருத்துவ கல்லுாரி, சங்கராபுரம் சாலை ரோடுமாமந்துார் பகுதியில் இணைக்கப்படுகிறது.
அதேபோல், ரோடு மாமாந்துாரில் இருந்து மோ.வன்னஞ்சூர், சடையம்பட்டு கிராம எல்லையில் உள்ள அரசு கலை கல்லுாரி வழியாக கச்சிராயபாளையம் சாலையில் காரனுார் பகுதியில் இணைக்க திட்டமிட்டுள்ளது.
காரனுார், தச்சூர் வழியாக சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இணைத்து பொற்படாக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக மீண்டும் வீரசோழபுரத்தில் முடியும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ளன. சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக ரிங் ரோடு திட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ள மாவட்ட பொறுப்பு அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறுகையில்; கள்ளக்குறிச்சி ரிங் ரோடு திட்டத்திற்கு தேவையான நிலம் தொடர்பாக அளவீடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
அதில் நகரை சுற்றிலும் மொத்தம் 13 கிராமங்கள் உள்ளடக்கியுள்ளது. தேவையான நிலம் தொடர்பாக மாவட்ட வருவாய் துறை அதிகாரி மூலம் நில நிர்வாக ஆணையருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டன.
தொடர்ந்து நில எடுப்பு பணிக்கு தேவையான அரசின் நிர்வாக ஒப்புதல் வேண்டி தலைமை செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நிர்வாக ஒப்புதலுக்கு பிறகு நில எடுப்பு பணிகள் மேற்கொண்டு, சாலை அமைப்பதற்கான அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

