/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி நகரில் சாலைகளை அகலப்படுத்துவது எப்போது? : ஆக்கிரமிப்புகளை அகற்றி நெரிசலுக்கு தீர்வு காண கோரிக்கை
/
கள்ளக்குறிச்சி நகரில் சாலைகளை அகலப்படுத்துவது எப்போது? : ஆக்கிரமிப்புகளை அகற்றி நெரிசலுக்கு தீர்வு காண கோரிக்கை
கள்ளக்குறிச்சி நகரில் சாலைகளை அகலப்படுத்துவது எப்போது? : ஆக்கிரமிப்புகளை அகற்றி நெரிசலுக்கு தீர்வு காண கோரிக்கை
கள்ளக்குறிச்சி நகரில் சாலைகளை அகலப்படுத்துவது எப்போது? : ஆக்கிரமிப்புகளை அகற்றி நெரிசலுக்கு தீர்வு காண கோரிக்கை
ADDED : மே 29, 2025 01:33 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகருக்குள் செல்லும் சாலைகளை அகலப்படுத்த அரசு நடவடிக்கைகளை உடனடியாகமேற்கொண்டு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், எலவனாசூர்கோட்டை ஆகிய பகுதிகளின் வழியே சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
கடந்த, 2013ம் ஆண்டு உளுந்துார்பேட்டை- சேலம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு, புறவழிச்சாலையும் அமைக்கப்பட்டது. அதன்பின் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாள்தோறும் முக்கிய நேரங்களில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை தொடர்கிறது.
கடந்த,10 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்ததுடன், சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்பு மற்றும் இட நெருக்கடி காரணமாக வாகனங்கள் செல்ல முடியாமல் திணறி வருகின்றன.
சாலை ஆக்கிரமிப்புகள்
கள்ளக்குறிச்சி நகரப்பகுதிக்குள் சேலம், சென்னை, கச்சிராயபாளையம், சங்கராபுரம் ஆகிய பகுதிகளுக்கான முக்கிய சாலைகள் உள்ளன. இந்த சாலைகள் அனைத்தும் முழுமையாக பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகளின் கோர பிடியால் குறுகலாகி உள்ளன. இந்த சாலையோரங்களில் மின் கம்பங்கள் சாலையை ஒட்டியே அமைந்துள்ளன. அத்துடன் வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளுடன், அங்கு வரும் வாகனங்களும் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இதனால் நகரப்பகுதிக்குள் தினமும் காலை, மாலை வேளைகள், முகூர்த்த நாட்கள், பண்டிகை காலங்கள்,
கட்சிகளின் ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற தருணங்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
வாகன ஓட்டிகள் கடும் அவதி
இதில் மாவட்ட தலைநகரமான கள்ளக்குறிச்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நகருக்கு வெளியே உள்ள கச்சிராயபாளையம், சங்கராபுரம் சாலைகள் மட்டும் நெடுஞ்சாலை துறையின் மூலம் சில கி.மீ., துாரத்திற்கு அகலப்படுத்தப்பட்டன. ஆனால் சென்னை மற்றும், சேலம் சாலைகளை சிறிதளவு கூட அகலப்படுத்துவற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி நகர பகுதிக்குள் உள்ள உள்ள, சென்னை, சேலம், கச்சிராயபாளையம், சங்கராபுரம் ஆகிய, 4 சாலைகளும் சற்றும் அகலப்படுத்தப்படாமல் குறுகலானதாகவே விடப்பட்டுள்ளன.
இந்த சாலைகளை செப்பனிடக்கூட அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை. இதனால் வாகனங்களை இந்த சாலைகளில் சாதாரணமாக இயக்க முடிவதில்லை. இந்நிலையில், அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'சாலையோரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு பல இடங்களில் வாகனங்கள் சாலையோரங்களில் இறங்கி செல்ல முடியாமல் திணறும் நிலை நீடித்து வருகிறது.
இந்த பகுதிகளை சமன்படுத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், கள்ளக்குறிச்சி நகரப்பகுதிக்குள் உள்ள, 4 முக்கிய சாலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகன போக்குவரத்துக்கு ஏற்றவாறு அகலப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.